2013-10-26 15:59:51

பொதுக்காலம் - 30ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 Prussia நாட்டு அரசர், Frederick, ஒருநாள் சிறைக் கைதிகளைச் சந்திக்கச் சென்றார். அரசரைக் கண்டதும், அங்கிருந்த கைதிகள் தங்கள் உள்ளக் குமுறல்களை அவரிடம் கொட்ட ஆரம்பித்தனர். தான் செய்யாத குற்றத்திற்காகச் சிறைதண்டனை அனுபவிப்பதாகவும், நீதிபதி தன் வழக்கைச் சரியாக விசாரிக்காமல் தீர்ப்பு வழங்கியதாகவும், தான் குற்றமற்றவர் என்றும் ஒவ்வொருவராகக் கூறியதை அரசர் பொறுமையுடன் கேட்டார். சிறையில் இருந்த ஒருவர் மட்டும் எதுவும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தார். அரசர் அவரை அணுகி, "நீயும் எக்குற்றமும் செய்யாமல் இவர்களைப் போல் மாட்டிக் கொண்டவன்தானே?" என்று கேட்டார். அதற்கு அந்த மனிதர், "இல்லை, மன்னா. நான் தவறு செய்தேன்; அதற்குரிய தண்டனையைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்" என்று பதில் சொன்னார். இதைக் கேட்டதும், அரசர், சிறை அதிகாரிகளிடம், "இந்தக் குற்றவாளியை உடனே வெளியில் அனுப்புங்கள். இவன் இங்கிருந்தால், சிறையில் உள்ள மற்ற குற்றமற்ற அப்பாவிகளை இவன் கெடுத்துவிடுவான்" என்று கட்டளையிட்டார்.
அரசனைக் கண்டதும், தங்கள் அருமை பெருமைகளைக் கூறிய கைதிகள், அதன் பலனை அனுபவிக்கப் போவதாகக் கனவு கண்டனர். இதற்கு மாறாக இருந்தது அந்த ஒரு கைதியின் நடத்தை. அரசனாக இருந்தாலும் சரி, ஆண்டவனாகவே இருந்தாலும் சரி, அந்தக் கைதி தன் உண்மை நிலையைச் சொன்னது, நமக்குச் சில பாடங்களைச் சொல்லித் தருகின்றது. இன்றைய நற்செய்தி சொல்லும் கருத்தும் இதுதான்... அரசன் ஆனாலும், ஆண்டவனே ஆனாலும் சரி... இதுதான் நான் என்று பணிவுடன், துணிவுடன் சொல்பவர் மீட்படைவார் என்பதே இன்றைய நற்செய்தியின் முக்கியப் பாடம்.

லூக்கா நற்செய்தி, 18ம் பிரிவில் கூறப்பட்டுள்ள உவமையின் ஆரம்ப வரிகளில், "இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர்" என்று இயேசு ஆரம்பிக்கிறார். இறைவன், கோவில், வேண்டுதல் என்ற வார்த்தைகளைக் கேட்டதும், இவ்வுவமை, செபிப்பது பற்றிய ஒரு பாடம் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், தாழ்ச்சி என்ற உயர்ந்த பாடத்தைச் சொல்லித் தரவே இயேசு இந்த உவமைச் சொன்னார் என்பதை இவ்வுவமையின் அறிமுக வரிகள் இவ்வாறு சொல்கின்றன: தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்: (லூக்கா 18: 9)

"இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்" (லூக்கா 18: 10) என்ற வார்த்தைகளுடன் இயேசு இந்த உவமையைத் துவக்கியதும், சூழ இருந்தவர்கள் கதையின் முடிவை ஏற்கனவே எழுதி முடித்திருப்பர். பரிசேயர் இறைவனின் ஆசீர் பெற்றிருப்பார்; வரிதண்டுபவர் இறைவனின் கோபமான தீர்ப்பைப் பெற்றிருப்பார் என்று மக்கள் முடிவு கட்டியிருப்பர். அவர்கள் அவ்விதம் சிந்தித்ததற்கு காரணமும் இருந்தது. பரிசேயர்கள் யூத சமுதாயத்தில் அவ்வளவு உயர்ந்த இடம் பெற்றிருந்தனர், வரிதண்டுபவரோ சந்தேகத்துடன் பார்க்கப்பட்டனர்.
பரிசேயர் என்றதும் நாம் எண்ணிப் பார்ப்பதெல்லாம், இயேசுவுடன் மோதலில், போட்டியில் ஈடுபட்ட பரிசேயர்களையே! இயேசுவின் காலத்தில் வாழ்ந்த அத்தனை பரிசேயர்களும் மோசமானவர்கள் அல்ல! பார்க்கப்போனால், அவர்கள் மிகக் கடினமான வழிகளில் இறைச் சட்டங்களை, இம்மியளவும் தவறாமல் பின்பற்றியவர்கள். "வாரத்தில் இருமுறை நோன்பிருக்கிறேன்; என் வருவாயில் எல்லாம் பத்தில் ஒரு பங்கைக் கொடுக்கிறேன்" (லூக்கா 18: 12) என்று அந்தப் பரிசேயர் தன்னைப் பற்றிச் சொன்னது வெறும் வீம்புக்காகச் சொன்ன வார்த்தைகள் அல்ல, உண்மை.
மோசே சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளவற்றிற்கும் பல மடங்கு அதிகமான செபம், தவம், உண்ணாநோன்பு, தர்மம் என்று அனைத்திலும் பரிசேயர்கள் எடுத்துக்காட்டான வாழ்க்கை நடத்தியவர்கள். அதுவும், இந்த முயற்சிகள் எல்லாமே மக்களின் கண்கள் முன்பாகவே இவர்கள் மேற்கொண்டனர். எனவே, "கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்" (லூக்கா 18: 11) என்று முழக்கமிட்டு அவர் அறிவித்தது, பொய் அல்ல, உண்மை.

பரிசேயருடன் ஒப்பிட்டால், வரிதண்டுபவர், மக்கள் மதிப்பில் பல படிகள் தாழ்ந்தவர்தான். உரோமையர்களுக்கு வரி வசூல் செய்த இவரிடம், நேர்மை, நாணயம், நாட்டுப்பற்று, இறைப்பற்று என்று பல அம்சங்கள் தொலைந்து போயிருந்தன. எனவே, இவ்விருவரும் இறைவன் முன்னிலையில் இருந்தபோது, பரிசேயருக்கு ஆசீரும், வரிதண்டுபவருக்கு தண்டனையும் இறைவன் வழங்குவார் என்று மக்கள் எண்ணியதில் தவறில்லை! இத்தகைய மனநிலையோடு கதையைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள் சற்றும் எதிர்பாராத வகையில் அவர்கள் எண்ணங்களை முற்றிலும் தலைகீழாகப் புரட்டிப் போட்டார் இயேசு:: பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் (லூக்கா 18: 14)

இந்தத் தலைகீழ் மாற்றம் உருவாகக் காரணம்... இவ்விருவரும் பெற்றிருந்த தன்னறிவு; அவர்கள் இறைவனிடம் கொண்ட உறவு. இவ்விருவருமே தங்களைப்பற்றி இறைவனிடம் பேசுகின்றனர். பரிசேயர் தனது நேர்மையான, அப்பழுக்கற்ற வாழ்வை இறைவனிடம் பட்டியலிட்டுக் கூறுகிறார். பரிசேயரின் கூற்று இறைவனின் கவனத்தை வலுக்கட்டாயமாகத் தன்மீது திருப்ப மேற்கொண்ட முயற்சி. அந்தக் கோவிலுக்கு தன்னுடன் சேர்ந்து வந்துவிட்ட வரிதண்டுபவரின் மீது இறைவனின் கவனம் திரும்பிவிடுமோ என்ற பயத்தில், அவரைவிட தான் கடவுளின் கவனத்தைப் பெறுவதற்குத் தகுதி உடையவர் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார் பரிசேயர். சொல்லப்போனால், கடவுளின் பார்வை தன்மேல் மட்டுமே இருக்கவேண்டும் என்ற ஆவலில், இவர் கடவுளுக்கே கடிவாளம் மாட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.

இதற்கு மாறாக, வரிதண்டுபவர் தன்னைப்பற்றி அதிகம் பேசவில்லை. அவர் சொன்னதெல்லாம் இதுதான்: "இறைவா, இதோ நான், இதுதான் நான், இவ்வளவுதான் நான்." தன் உண்மை நிலையைப் புரிந்துகொள்ளுதல், அதனை ஏற்றுக் கொள்ளுதல் ஆகிய அம்சங்கள் உண்மையான தாழ்ச்சியின் கூறுகள். இந்தத் தன்னறிவில், அடுத்தவரை இணைக்காமல், ஒப்பிடாமல் சிந்திப்பது இன்னும் உயர்ந்ததொரு மனநிலை.

தலை சிறந்த ஏழு புண்ணியங்களில் ஒன்றாகக் கருதப்படுவது தாழ்ச்சி. இந்தப் புண்ணியத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. "தனக்கு தாழ்ச்சி உள்ளது என்று ஒருவர் நினைக்கும் அந்த நொடியில் இந்தப் புண்ணியம் தொலைந்து போகிறது. 'நான் தாழ்ச்சியை எவ்விதம் வெற்றிகரமாக அடைந்தேன்' என்ற தலைப்பில் இதுவரை ஒரு நூல் வெளிவந்ததில்லை. அப்படி ஒரு நூல் வெளிவந்தால், அதைவிட முரண்பாடு ஒன்று இருக்க முடியாது." என்று ஓர் அறிஞர் தன் பெயரைக் குறிப்பிடாமல் (Anonymous) கூறியுள்ளார்.

நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய தாழ்ச்சியைக் குறித்து மக்களுக்கு மறையுரையாற்றிய ஒருவர், இறுதியில் ஒரு சிறு செபத்தைச் சொன்னார்: "இறைவா, இயேசுவைப்போல் பணிவில் நாங்கள் வளரச் செய்தருளும். எங்களுக்கு முன் நிற்பவர்கள் எங்களைவிட தாழ்ந்தவர்கள் என்பதை நாங்கள் அறிந்திருந்தாலும், அவர்களுக்கு முன் பணிவுடன் இருக்க வரம் தாரும்" என்று அவர் வேண்டினார்.
இது மிகவும் ஆபத்தான, அபத்தமான, தவறான செபம். போலித்தாழ்ச்சிக்கு அழகானதோர் எடுத்துக்காட்டு. நமக்கு முன் நிற்பவர் நம்மைவிட தாழ்ந்தவர் என்ற எண்ணமே நம்மைத் தற்பெருமையில் சிக்கவைத்துவிடும். அந்தப் பெருமிதமான எண்ணங்களுடன் அவர்களுக்கு முன் பணிவது, நடிப்பே தவிர, உண்மையான பணிவு அல்ல. இயேசுவைப்போல் எம்மை மாற்றும் என்று சொன்ன அதே மூச்சில், போலியானத் தாழ்ச்சியையும் இணைப்பது மிகவும் ஆபத்தானது.

இந்திய மதகுரு ஒருவர் சொன்ன கதை, போலி தாழ்ச்சிபற்றி இவ்விதம் கூறுகிறது:
தற்பெருமைக்கு இலக்கணமாய் வாழ்ந்த ஓர் அரசனை ஞானி ஒருவர் பார்க்க வந்தார். அரசன் அவரை உடனே சந்திக்கவில்லை. பல அலுவல்களில் மூழ்கி இருப்பது போல் நடித்துக்கொண்டு, அந்த ஞானியைக் காத்திருக்கச் செய்துவிட்டு, பிறகு அரசன் அவரைச் சந்தித்தான். அரசனுக்கு முன் ஞானி வந்ததும், அவர் தன் தலையில் அணிந்திருந்த தொப்பியைக் கழற்றி அரசனை வணங்கினார். உடனே, அரசனும் தான் அணிந்திருந்த மகுடத்தைக் கழற்றி ஞானியை வணங்கினான். இதைக்கண்ட அமைச்சர்களுக்குப் பெரும் ஆச்சரியம். அவர்களில் ஒருவர், "அரசே, என்ன இது? அந்த மனிதன் சாதாரண குடிமகன். அவன் தன் தொப்பியைக் கழற்றி வணங்கியது முறையே. அதற்காக நீங்கள் ஏன் உங்கள் மகுடத்தை கழற்றினீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அரசன் சொன்ன விளக்கம் இது: "முட்டாள் அமைச்சரே, அந்த மனிதனைவிட நான் குறைந்து போக வேண்டுமா? அவன் தன் பணிவைக் காட்ட தொப்பியைக் கழற்றி எனக்கு வணக்கம் சொன்னான். அவனுக்கு முன் நான் என் மகுடத்தைக் கழற்றவில்லையெனில், அவன் பணிவில் என்னை வென்றுவிடுவான். நான் அவன் முன் தோற்றுவிடுவேன். யாரும், எதிலும் என்னை வெல்லக்கூடாது. புரிகிறதா?" தாழ்ச்சியிலும் தன்னை யாரும் வென்றுவிடக் கூடாது என்பதில் கருத்தாய் இருந்த அரசன் கூறிய விளக்கத்தைக் கேட்டு, அமைச்சர் வாயடைத்து நின்றார். போலியான பணிவுக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு இது.

பெருமை, பணிவு என்ற இரு மனித உணர்வுகளை, மனநிலைகளை ஆய்வுசெய்ய இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கின்றது. மேலோட்டமாகச் சிந்திக்கும்போது, பெருமையும், பணிவும் எதிரும் புதிருமான முரண்பட்ட இரு மனநிலைகளாகத் தோன்றுகின்றன. ஒன்று இருக்கும் இடத்தில், மற்றொன்று இருக்கமுடியாது என்பதே நம்மிடையே உள்ள பரவலான கருத்து. ஆயினும், ஆழமாகச் சிந்தித்தால், உண்மையான பெருமையும், உண்மையான பணிவும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஒளி என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள இருளைப்பற்றி நாம் சிந்திப்பதுபோல், உண்மையான பணிவு அல்லது பெருமை ஆகியவற்றைப் புரிந்துகொள்ள போலியானப் பணிவு, போலியான பெருமை ஆகியவற்றை உருவாக்கும் அகந்தையைப் புரிந்துகொள்வது நல்லது.

கதாசிரியராக, கவிஞராக, இறையியல் மேதையாக, பேராசிரியாகப் பணியாற்றியவர் C.S.Lewis. இவர், Mere Christianity - குறைந்தபட்ச கிறிஸ்தவம் - என்ற நூலை 1952ம் ஆண்டு வெளியிட்டார். இந்நூலில் 'The Great Sin' - பெரும் பாவம் - என்ற தலைப்பில் அகந்தையைப்பற்றி ஆழமான கருத்துக்களைக் கூறியுள்ளார். அக்கட்டுரையின் ஆரம்ப வரிகளே நம்மை ஈர்க்கின்றன:
"எவ்வித விதிவிலக்கும் இல்லாமல், இவ்வுலகில் வாழும் அனைத்து மனிதரிடமும் ஒரு குறை உள்ளது. மற்றவர்களிடம் இக்குறையைக் கண்டு வெறுக்கும் நாம், அதே குறை நம்மிடம் உள்ளதென்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம். இதுதான் அகந்தை" என்று அவர் தன் கட்டுரையை ஆரம்பித்துள்ளார். பின்னர், அகந்தையின் ஒரு முக்கியப் பண்பான ஒப்புமைப்படுத்துதல் என்பதைக் குறித்து அழகாக விவரிக்கிறார்.
ஒப்புமையும், போட்டியும் இன்றி அகந்தையால் வாழமுடியாது. என்னிடம் ஒன்று உள்ளது என்று சொல்வதைவிட, ‘என்னிடம் உள்ளது, அடுத்தவரிடம் உள்ளதை விட அதிகம் என்ற கோணத்தில் நம்மைச் சிந்திக்கத் தூண்டுவதே அகந்தை. என் திறமை, அழகு, அறிவு இவற்றில் நான் பெருமை கொள்கிறேன் என்று ஒருவர் சொல்கிறார். உண்மையில் அவர் சொல்ல முனைவது வேறு... மற்றவர்களைக் காட்டிலும், அதிகத் திறமையுள்ளவராக, அழகானவராக, அறிவுள்ளவராக இருப்பதில்தான் பெருமை - அதாவது, அகந்தை - கொள்ளமுடியும். சமநிலையில் அழகு, அறிவு, திறமை உள்ளவர்கள் மத்தியில், ஒருவர் அகந்தை கொள்ளமுடியாது. ஒப்புமையோ, போட்டியோ இல்லாதச் சூழலில் அகந்தைக்கு இடமில்லை."
இன்றைய உவமையில் நாம் காணும் பரிசேயர் தன்னை மற்றவர்களோடு ஒப்புமைப்படுத்தி, அதில் தன் பெருமையை நிலைநாட்டுகிறார். இவ்வகைப் போட்டியாலும், ஒப்புமையாலும், அகந்தையில் சிக்கியவர்கள், கடவுளோடும் தொடர்பு கொள்ளமுடியாது. அவர்களைப் பொருத்தவரை, கடவுளும் அவர்களுக்குப் போட்டியே.

இதற்கு மாற்றாக, சொல்லப்படும் புண்ணியம், அடக்கம், பணிவு, தாழ்ச்சி என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்த புண்ணியத்தைப் புகழ்ந்து பல பெரியோர் பேசியுள்ளனர். தாழ்ச்சியே மற்ற அனைத்து புண்ணியங்களுக்கும் அடித்தளம், ஆதாரம் என்று புனித அகுஸ்தின் கூறியுள்ளார். அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் என்று ஆரம்பமாகும் அடக்கமுடைமை என்ற பிரிவில், அழகிய பத்து குறள்களை நமது சிந்தையில் பதிக்கிறார் திருவள்ளுவர்.

தன் அகந்தையினால் பார்வை இழந்து, இறைவனின் நியமங்களைக் காப்பதாக எண்ணி, கிறிஸ்தவர்களை அழித்துக் கொண்டிருந்த திருத்தூதர் பவுல் அடியார் சொல்லும் வார்த்தைகள் நமது ஞாயிறு சிந்தனையை நிறைவு செய்யட்டும்.
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 12 : 9-10
கிறிஸ்து என்னிடம், “என் அருள் உனக்குப் போதும்: வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும் என்றார். ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும். ஆகவே என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில் நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்.








All the contents on this site are copyrighted ©.