2013-10-26 16:43:43

இலங்கையில் மதததலைவர்களின் இறைவாக்குரைக்கும் பணி தேவைப்படுகிறது, அருட்தந்தை எஸ். ஜே. இம்மானுவேல்


அக்.,26,2013. ஒப்புரவை உருவாக்க இலங்கை அரசு தவறியுள்ள வேளையில், மதத்தலைவர்களின் இறைவாக்குரைக்கும் பணி தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார், உலகத்தமிழர் அமைப்பின் தலைவர் அருள் பணியாளர் எஸ். ஜே. இம்மானுவேல்.
ஒப்புரவு மற்றும் மறுகட்டுமானப்பணிகள் குறித்து சிறிதும் கவலைப்படாத இலங்கை அரசு, உள்நாட்டுப் போர்வெற்றியைக் கொண்டாடும் நோக்கத்தில், வெளிநாட்டு உதவிகளைக் கொண்டு, போர்வெற்றி நினைவுச்சின்னங்களையும், இராணுவ முகாம்களையும் அமைப்பதிலேயே கவனம் செலுத்திவருகிறது என குற்றம் சாட்டிய அட்ருட்தந்தை, போரால் பாதிக்கப்பட்டு புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு வீடுகளைக் கட்டித்தரவேண்டியது அரசின் கடமை என்பதைச் சுட்டிக்காட்டினார்.
தமிழர்களின் பகுதிகள் இராணுவமயமாக்கப்பட்டுள்ளது குறித்த கவலையையும் வெளியிட்ட அருள் பணியாளர் எஸ். ஜே. இம்மானுவேல் அவர்கள், மதத்தலைவர்களும் சமூகத்தலைவர்களும் அச்சமின்றி உண்மையை அரசிடம் எடுத்துரைக்கும் தங்கள் கடமையை நிறைவேற்றும்போதே, இனங்களிடையே இணக்கவாழ்வு சாத்தியமாகும் என மேலும் உரைத்தார்.
இலங்கைத்தமிழர்களின் நல்வாழ்விற்காகவும், அனைத்து மக்களும் இலங்கையில் ஒற்றுமையில் வாழவும், ஐரோப்பாவிலிருந்து தொடர்ந்து உழைத்து வருகிறார் அருள் பணியாளர் எஸ். ஜே. இம்மானுவேல்.

ஆதாரம் : FIDES








All the contents on this site are copyrighted ©.