2013-10-26 16:44:08

இந்தியாவில் 10 இலட்சம் பேருக்கு மிக மோசமான காசநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, உலக நலவாழ்வு நிறுவனம்


அக்.,26,2013. இந்தியாவில் 10 இலட்சம் பேருக்கு, மிக மோசமான காசநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும், இந்தியாவில், 2.7 இலட்சம் பேர், இந்த நோய்க்கு பலியாகியுள்ளதாகவும், நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.
இந்த நோயின் தாக்கம் குறித்து, உலக நலவாழ்வு நிறுவனம், இவ்வாண்டு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், உலகம் முழுவதும், காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில், இந்தியாவைச் சேர்ந்தவர்களின் பங்கு மட்டும், 31 விழுக்காடு என தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மட்டும், காசநோயால், மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை, 10 இலட்சம் என்றும் கூறியுள்ள அந்த ஆய்வின் தகவல், காசநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, வங்க தேசம், பாகிஸ்தான், இந்தோனேசியா, சீனா, காங்கோ, நைஜீரியா, பிலிப்பீன்ஸ், மியான்மர் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடுகிறது.
கடந்தாண்டில் உலக அளவில், 4.5 இலட்சம் பேர், புதிதாக இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், இந்தியா, சீனா, இரஷ்யாவைச் சேர்ந்தவர்கள்.

ஆதாரம் : Dinamalar








All the contents on this site are copyrighted ©.