2013-10-25 15:53:39

உயிரியல் தொழில்நுட்பம் ஏன் மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியுள்ளது - கர்தினால் டர்க்சன் எழுப்பிய கேள்வி


அக்.25,2013. பொறுப்புணர்வும், தகுதியான மனநிலையோடு செயலாற்றும் திறனும் கொண்டவர்கள், இயற்கையில் காணப்படும் வளர்ச்சியில் மாற்றங்கள் கொணர்வது சரியான வழியாக அமையும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
அமெரிக்காவின் Iowa மாநிலத்தின் Des Moines நகரில், உலக உணவுப் பொருள்களின் விலை குறித்து நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், திருப்பீடத்தின் நீதி அமைதிப் பணிக்குழுவின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் இவ்வாறு கூறினார்.
வளர்ந்துவரும் நாடுகள், சுற்றுச்சூழல் மாற்றங்களால் சந்திக்கும் பிரச்சனைகளை மனதில் கொண்டு, முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், இயற்கை வளங்களை இன்னும் அதிகப்படுத்தும் வழிகளை ஆய்வு செய்யவேண்டும் என்று விடுத்த அழைப்பை, கர்தினால் டர்க்சன் தன் உரையில் குறிப்பிட்டார்.
உயிரியல் தொழில்நுட்பம் ஏன் மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியுள்ளது என்ற கேள்வியை எழுப்பிய கர்தினால் டர்க்சன் அவர்கள், சுயநலத்தினால் தூண்டப்பட்டு, கட்டுப்பாடற்ற வகையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளே, இத்தகைய அச்சத்தை உருவாக்குகின்றன என்பதையும் எடுத்துரைத்தார்.
பேராசையால் தூண்டப்பட்டு உணவுப் பொருள்களின் இயற்கை நியமங்களைச் சிதைப்பதும், உணவுப் பொருள்களின் விலைகளை அளவுக்கதிகமாகக் கூட்டுவதும் நன்னெறி கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரணானவை என்பதையும் கர்தினால் டர்க்சன் அவர்கள் வலியுறுத்தினார்.

ஆதாரம் : UCAN








All the contents on this site are copyrighted ©.