2013-10-24 16:25:40

மலர் மேல் நீர்த்துளி போல வாழ்வது உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை அல்ல - திருத்தந்தை


அக்.24,2013. ரோஜா மலர் மேல் தெளிக்கப்பட்ட நீர்த்துளி போல அமையும் வாழ்வு உண்மையான கிறிஸ்தவ வாழ்வு அல்ல என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலைத் திருப்பலியில் கூறினார்.
புனித மார்த்தா இல்லத்தில், திருத்தந்தை ஆற்றிய திருப்பலியில், திருத்தூதர் பவுல் அடியார் உரோமையருக்கு எழுதியத் திருமுகத்தின் 6ம் பிரிவிலிருந்து எடுக்கப்பட்ட வாசகத்தை மையப்படுத்தி மறையுரை வழங்கினார்.
கிறிஸ்துவை அறிவதற்கு முன்னும், அவரை அறிந்த பின்னும் நம்மிடையே உருவாக வேண்டிய மாற்றங்கள் தெளிவான, திட்டவட்டமான மாற்றங்களாக அமையவேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.
நான் கிறிஸ்தவர் என்பதை வெளிப்படையாக அறிவித்துவிட்டு, கிறிஸ்துவை அறியாதவர்போல வாழ்வது, மலர்மேல் தெளிக்கப்பட்டு, பட்டும் படாமல் இருக்கும் நீர்த்துளி போன்ற வாழ்க்கை என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
உள்ளார்ந்த மனமாற்றம் ஏதுமின்றி, வெளிப்புறத்தில் கிறிஸ்தவம் என்ற சிறிதளவு வண்ணத்தையும், மறைக்கல்வி என்ற சிறிதளவு வண்ணத்தையும் பூசிக்கொண்டு வாழ்வது, “ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன்” (பிலிப். 3:8) என்று பவுல் அடியார் கூறுவதற்கு முற்றிலும் முரணான ஒரு வழி என்பதையும் திருத்தந்தை வலியுறுத்தினார்.
தீர்மானமாக, திட்டவட்டமாக, கிறிஸ்தவ வாழ்வில் ஈடுபட நமக்கு விருப்பமா என்பதே, இன்று நம்முன் வைக்கப்பட்டுள்ள முக்கியமான ஒரு சவால் என்ற எண்ணத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.