2013-10-24 16:30:32

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்தாலிய அரசுத் தலைவரை, அவரது அரண்மனைக்குச் சென்று சந்திப்பார்


அக்.24,2013. நவம்பர் 14, வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்தாலிய அரசுத் தலைவர் மாளிகையான Quirinal அரண்மனைக்குச் சென்று அரசுத் தலைவரைச் சந்திப்பார் என்று திருப்பீட பத்திரிகை மையத்தின் இயக்குனரான இயேசு சபை அருள் பணியாளர் Federico Lombardi அவர்கள் செய்தியாளர்களிடம் இப்புதனன்று அறிவித்தார்.
இத்தாலிய அரசுத் தலைவர் Giorgio Napolitano அவர்களுக்கும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும் இடையே நிகழும் மூன்றாவது சந்திப்பு இது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 19ம் தேதியன்று, திருஅவையின் தலைமைப் பொறுப்பேற்ற திருப்பலியில் இத்தாலிய அரசுத் தலைவர் Napolitano அவர்கள் கலந்துகொண்டு, பின்னர் திருத்தந்தையை ஏனைய அரசுத் தலைவர்களுடன் தனிப்பட்ட வகையில் சந்தித்தார்.
மேலும், கடந்த ஜூன் மாதம் 8ம் தேதியன்று அவர் மீண்டும் வத்திக்கானுக்கு வருகை தந்து, திருத்தந்தை அவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்தார்.
இத்தாலிய அரசுத் தலைவரின் அரண்மனைக்கு, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், 1939ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி முதன்முறையாகச் சென்றார். அவருக்குப் பின் நான்கு திருத்தந்தையர் இவ்வரண்மனைக்குச் சென்று இத்தாலிய அரசுத் தலைவர்களைச் சந்தித்துள்ளனர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Quirinal அரண்மைக்குச் செல்லும் ஆறாவது திருத்தந்தையாக இருப்பார் என்று அருள் பணியாளர் Lombardi அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.