2013-10-24 16:05:22

கற்றனைத்தூறும் ... கோவளம் கடற்கரை


சென்னையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் அமைந்திருப்பது கோவளம் கடற்கரை. கிழக்குக் கடற்கரை சாலையில் மகாபலிபுரம் செல்லும் பாதையில் இது அமைந்துள்ளது. நவாப்சாதத் அலி ஆட்சி காலத்தில் இப்பகுதி துறைமுகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிறகு பிரித்தானியரின் ஆட்சி காலத்தில் இங்கிருந்த துறைமுகம் அழிக்கப்பட்டுவிட்டது. பிறகு மீண்டும் டச்சுக்காரர்களின் ஆட்சியின்போது இங்கு துறைமுகம் அமைக்கப்பட்டது. இந்த கடற்கரையில் ஓர் ஆலயமும், மிகப்பெரிய மசூதியும் அமைந்துள்ளன. கோவளம் கடற்கரையில் டச்சுக்காரர்கள் அமைத்த துறைமுகத்தின் சேதமடைந்த ஒரு சில கட்டட இடிபாடுகளையும் காண முடிகிறது. தியானம், உடற்பயிற்சி, யோகா போன்றவற்றில் ஈடுபட மிக அமைதியான கடற்கரையாக இது திகழ்கிறது. பௌர்ணமி நாட்களில் இங்குச் சென்றால் நிச்சயம் இனிமையான இயற்கை காட்சிகளைக் காணலாம். பௌர்ணமி தினத்தன்று மாலை வேளையில் நிலா மேலெழும்பும் காட்சியைக் காண்பதற்காக இங்கு அதிகமானோர் கூடுவதும் வழக்கம். கட்டுமரத்தில் மீனவர்களுடன் பயணிக்கவும் இங்கு வசதி உள்ளது. ஒரு கட்டுமரத்தில் எட்டுப் பேர் வரை கடலுக்குள் சென்று வரலாம். பாதுகாப்பு ஆடைகளும் வழங்கப்படுகின்றன. இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும், காற்றின் வேகத்தில் செல்லும் படகில் பயணிக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு இது மிகச் சிறந்த இடமாக உள்ளது. நீச்சல் தெரிந்தவர்கள் இந்த கடலில் குளித்து மகிழலாம்.

ஆதாரம் : தினமணி








All the contents on this site are copyrighted ©.