2013-10-24 16:29:58

இனம், மதம், மொழி, கலாச்சாரம் என்ற அனைத்து அம்சங்களிலும் நிலவும் சகிப்பற்ற தன்மை முற்றிலும் களையப்பட வேண்டும் - திருத்தந்தை


அக்.24,2013. சிறுபான்மையினர் என்ற ஒரே காரணத்திற்காக உலகின் எப்பகுதியிலும் ஒருவர் துன்புறுத்தப்பட்டால், அப்பகுதியில் வாழும் முழு சமுதாயமும் துன்புறும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
மனித உரிமைகளைப் பேணும் நோக்கத்தில், செயலாற்றிவரும் Simon Wiesenthal மையம் என்ற ஒரு பன்னாட்டு யூத நிறுவனத்தின் உறுப்பினர்களை இவ்வியாழன் காலையில் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தச் சந்திப்பை பல மாதங்களுக்கு முன்னரே உறுதி செய்திருந்த முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களையும் மகிழ்வுடன் நினைவுகூர்ந்தார்.
யூதர்களுக்கு எதிராக வரலாற்றில் இழைக்கப்பட்ட அனைத்து கொடுமைகளையும் கண்டனம் செய்து அண்மைய நாட்களில் தான் கருத்துக்கள் வெளியிட்டுள்ளதை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இனம், மதம், மொழி, கலாச்சாரம் என்ற அனைத்து அம்சங்களிலும் நிலவும் சகிப்பற்ற தன்மை முற்றிலும் களையப்பட வேண்டுமென்ற அழைப்பையும் விடுத்தார்.
தங்களைக் காட்டிலும் வேறுபட்டிருக்கும் அனைத்து மனிதர்கள் மீதும் மதிப்பை வளர்ப்பதற்கும், வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளும் மனப் பக்குவத்தை வளர்த்துக் கொள்வதற்கும் நமது அடுத்தத் தலைமுறைக்கு சரியான வழிகளில் கல்வி புகட்டப் படவேண்டுமென்று திருத்தந்தை இச்சந்திப்பில் தன் ஆவலை வெளியிட்டார்.
இரண்டாம் உலகப் போரின்போது, நாத்சி வதை முகாம்களில் நடைபெற்ற யூதத் தகனக் கொடுமையிலிருந்து தப்பித்த Simon Wiesenthal என்ற யூதரால் நிறுவப்பட்ட இம்மையம், இன்று உலகின் பல நாடுகளில் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.