2013-10-23 17:06:37

மலேசியாவில் கிறிஸ்தவர்கள், இறைவனைக் குறிப்பிட, 'அல்லா' என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம் - அந்நாட்டுப் பிரதமர்


அக்.23,2013. மலேசியாவில் Borneo பகுதியில் உள்ள கிறிஸ்தவர்கள், இறைவனைக் குறிப்பிட, 'அல்லா' என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம் என்று அந்நாட்டுப் பிரதமர், Najib Razak அவர்கள் கூறியுள்ளார்.
மலேசியாவின் Sabah மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் Razak அவர்கள், 'அல்லா' என்ற சொல்லை பயன்படுத்துவதை, ஓர் அரசியல் பிரச்சனையாக்குவது, நெருப்புடன் விளையாடுவதைப் போன்ற ஒரு நிலை என்று எச்சரித்துள்ளார்.
'அல்லா' என்ற பெயரை, கிறிஸ்தவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று தீர்ப்பளித்த நீதிபதிகள், சரியான, உண்மையான விவரங்களின் அடிப்படையில் தங்கள் தீர்ப்பை வழங்கவில்லை என்று கோலாலம்பூர் பேராயர் மர்பி பாக்கியம் அவர்கள், ஏற்கனவே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
'ஒரே இறைவன்' என்ற கருத்தைக் கூறுவதற்கு, மலேசிய மொழியில் 'அல்லா' என்ற ஒரே வார்த்தைதான் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியப் பேராயர் பாக்கியம் அவர்கள், இச்சொல்லைப் பயன்படுத்துவதால், கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் வணங்கும் இறைவனைப் பின்பற்றுகின்றனர் என்று கூறுவது தவறு என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.