2013-10-23 17:04:07

மனித குலம் சந்தித்துவரும் துயரங்களை நீக்கும் ஒரே வழி, அனைத்து ஆயுதங்களையும் முற்றிலும் தடை செய்வதே - பேராயர் சுள்ளிக்காட்


அக்.23,2013. அணு ஆயுதங்களால் மனித குலம் சந்தித்துள்ள பெருமளவு துயரங்களை நீக்கும் ஒரே வழி, அனைத்து ஆயுதங்களையும் முற்றிலும் தடை செய்வதே என்று திருப்பீட உயர் அதிகாரியான பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட் அவர்கள் கூறினார்.
ஐ.நா. அவை கூட்டங்களில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் சுள்ளிக்காட் அவர்கள், நியூயார்க்கில் நடைபெற்றுவரும் ஐ.நா. அவையின் 68வது அமர்வில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
சிரியாவில் வேதிய ஆயுதங்கள் தொடர்பாக ஆய்வுப் பயணம் மேற்கொண்ட ஐ.நா. அதிகாரிகள், எவ்வகை ஆயுதங்களானாலும், அவை அனைத்தையும் தடைசெய்ய உலக அரசுகள் முன்வரவேண்டும் என்று விடுத்துள்ள அழைப்பை, பேராயர் சுள்ளிக்காட் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
வேதிய ஆயுதங்கள் பற்றி வலிமையாகக் குரல் எழுப்பும் பல உலக அரசுகள், அணு ஆயுதங்கள் பற்றி அமைதி காப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு முரண்பாடு என்பதையும் பேராயர் தன் உரையில் வலியுறுத்தினார்.
ஆயுதங்களுக்கும், இராணுவத்திற்கும் ஒவ்வோர் அரசும் செலவிடும் மிக அதிகத் தொகையில், மிகக் குறைந்த அளவு தொகையினை மக்கள் முன்னேற்றத்திற்குச் செலவழித்தால், ஆயுதங்களே இவ்வுலகில் தேவையில்லாமல் போகும் என்ற கருத்தையும் பேராயர் சுள்ளிக்காட் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.