2013-10-23 17:03:02

பெரும் குற்றங்கள் புரிவோர் தண்டனை பெறாமல் செல்லும்போது, சிறு தவறுகளில் பிடிபடுவோர் சிறைகளில் அடைக்கப்படுவது கவலை தருகிறது - திருத்தந்தை பிரான்சிஸ்


அக்.23,2013. சிறையில் இருப்போர் இந்தக் கடினமான காலத்தை வெற்றியுடன் கடந்து வெளியேறுவதற்கு, அன்னை மரியாவும், ஆண்டவரும் உதவ வேண்டுமென்று நான் மன்றாடிவருகிறேன் என்பதை, சிறையில் இருப்போருக்கு என் சார்பில் கூறுங்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இத்தாலியில் உள்ள அனைத்துச் சிறைகளிலும் மேய்ப்புப்பணி ஆற்றிவரும் அருள் பணியாளர்களை இப்புதன் காலையில் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறையில் இருப்போருக்கு தன் தொடர்ந்த செபங்களை அவர்கள் வழியாக அனுப்புவதாகக் கூறினார்.
பெரும் குற்றங்கள் புரியும் பலர் எவ்விதத் தண்டனையும் பெறாமல் செல்லும்போது, சிறு தவறுகளில் பிடிபடுவோர் சிறைகளில் அடைக்கப்படும் இவ்வுலகப் போக்கைக் குறித்து திருத்தந்தை இந்தச் சந்திப்பின்போது தன் கவலையை வெளியிட்டார்.
தன்னலம், பேராசை, அநீதி என்ற தீமைகளால் இறைவன் இவ்வுலகில் சிறைப்பட்டுள்ளார் என்று கூறிய திருத்தந்தை, சிறையில் இருப்போருடன் இறைவன் என்றும் துணையாய் இருக்கிறார் என்பதை, அங்கு பணியாற்றும் அருள் பணியாளர்கள், தங்கள் சொற்களாலும், செயல்களாலும் அவர்களுக்கு உணர்த்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சிறையில் பணியாற்றுவது கடினமான ஒரு பணி என்பதை எடுத்துரைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் Buenos Aires பேராயராகப் பணியாற்றியபோது, சிறையில் சந்தித்த ஒரு சிலர் இன்னும் தன்னுடன் தொடர்பு கொண்டுள்ளதாக அருள் பணியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.