2013-10-23 16:08:46

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


அக்.23,2013. இத்தாலியில் குளிர்காலம் ஏற்கனவே துவங்கியுள்ளபோதிலும், இப்புதனின் காலநிலை மிக இதமாகவே இருக்க, திருத்தந்தையின் புதன் மறைபோதகம் தூய பேதுரு வளாகத்திலேயே இடம்பெற்றது. திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகத்திற்கும் ஞாயிறு மூவேளைச்செபஉரைக்கும் ஒவ்வொரு வாரமும் கூட்டம் அதிகரித்து வருவதையொட்டி, இவ்வாரமும் வளாகம் நிரம்பிவழிய, திருஅவை குறித்த மறைபோதகத்தின் தொடர்ச்சியாக, இப்புதனன்று அனனைமரி குறித்து தன் உரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இரண்டாம் வத்திக்கான்சங்கம் நமக்கு உரைப்பதுபோல், 'விசுவாசம், அன்பு, கிறிஸ்துவோடு கொண்டுள்ள நிறை ஒன்றிப்பு ஆகியவற்றால் திருஅவையின் சிறந்த ஓர் எடுத்துக்காட்டாக உள்ள அன்னைமரி குறித்து இன்று நோக்குவோம். இஸ்ராயேலின் புதல்வியான அன்னைமரி, இறைவனின் அழைப்புக்கு தன் விசுவாசத்தில் பதிலுரைத்து, இறைமகனின் தாயாக மாறினார். இறைவிருப்பத்திற்குக் கீழ்ப்படிந்ததன்வழி, விசுவாச வாழ்வை எவ்வாறு வாழவேண்டும் என்பதை அவர் நமக்குக் கற்பிக்கிறார். மேலும், இயேசு மற்றும் அவரின் பணிகளின் மீதான முழுபற்றுறுதி வழியாகவும் நமக்கு வழிகாட்டுகிறார். விசுவாசத்திலிருந்து பிறக்கும் திருஅவைக்குரிய பிறரன்பின் மாதிரிகையாக அன்னைமரி உள்ளார். திருஅவையின் இப்பிறரன்பே, கிறிஸ்துவின் பிரசன்னத்திலிருந்து கிட்டும் மகிழ்வையும் அமைதியையும் பிறருக்கும் உலகுக்கும் கொணர்கிறது. இறுதியாக, அன்னை மரி தன்னுடைய தொடர்ந்த செபம், இயேசுவின் வாழ்வு, மரணம் மற்றும் உயிர்ப்பு மறையுண்மையில் பங்கேற்பு ஆகியவை மூலம், கிறிஸ்துவுடனான திருஅவையின் ஒன்றிப்பின் மாதிரிகையாக உள்ளார். திருஅவையின் தாயாக இருக்கும் அன்னைமரி, தன்னுடைய செபம் வழியாக, நம்மை இயேசுவின் அருகாமையில் கொணரவும், இயேசுவின் மீட்பளிக்கும் அன்பிற்கு நம் இதயங்களைத் திறக்கவும், இறைவார்த்தையில் நாம் முழுவிசுவாசத்தைக் கொண்டிருக்கத் தூண்டவும், நமக்கும் இவ்வுலகிற்கும் இயேசு கொண்டுள்ள அருள்நிறை திட்டத்திலும் அவரின் நன்மைத்தனத்திலும் முழு நம்பிக்கைக்கொண்டுச் செயல்படவும் நமக்கு உதவுவாராக, என இப்புதன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.