2013-10-22 16:06:16

விவிலியத்
தேடல் செல்வரும் இலாசரும் உவமை – பகுதி 3


RealAudioMP3 ‘செல்வரும் இலாசரும்’ என்ற உவமையின் அறிமுக வரிகளிலிருந்து, இரு ஒப்புமைகளை சென்ற விவிலியத் தேடலில் நாம் சிந்தித்தோம். “செல்வர் ஒருவர் இருந்தார். இலாசர் என்ற பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார்” என்பது முதல் ஒப்புமை. செல்வரையும், இலாசரையும் குறித்து நாம் கண்ட இரண்டாவது ஒப்புமை, அவ்விருவரின் தோற்றத்தைப் பற்றியது. செல்வர் செந்நிற மெல்லிய ஆடை அணிந்திருந்தார் என்றும்... இலாசரின் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது என்றும் இயேசு கூறும் வார்த்தைகள், மனதில் ஆணிகளை அறைந்தன.

இந்த அறிமுக வரிகளில் நாம் காணும் மூன்றாவது ஒப்புமையைச், சிந்திக்கும்போது, உள்ளத்தில் அறையப்பட்ட ஆணிகள் இன்னும் ஆழமாய் ஊடுருவுகின்றன.
• செல்வர் நாள் தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.
• இலாசர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகேக் கிடந்தார்.
• செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தன் பசியாற்ற விரும்பினார்.
• நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.

செல்வர் மறுவாழ்வில் நரக தண்டனை பெற்றதற்கு இந்த மூன்றாவது ஒப்புமையில் காரணம் காணமுடிகிறது. நரக தண்டனை பெறுமளவு அச்செல்வர் செய்த தவறுதான் என்ன? அவர் உண்டு குடித்து மகிழ்ந்தார்... ஒருவர் உண்டு குடித்து மகிழ்வதால் நரகமா? இது கொஞ்சம் மிகையானத் தண்டனையாகத் தெரிகிறது என்று சொல்லத் தோன்றுகிறது. அன்பர்களே, அவர் உண்டு குடித்து, மகிழ்ந்ததற்காக இத்தண்டனை கிடையாது. ஆனால், அந்த மகிழ்விலேயே ஒவ்வொருநாளும் மூழ்கி, தன்னைச் சுற்றி இயங்கிவந்த உலகைக் காண மறுத்த அவரது மிகுதியான தன்னலத்திற்காகவே இத்தண்டனை. தேவையுடன் ஒருவர் அவருக்கு முன் கிடந்தபோது, அதனால் எவ்வகையிலும் பாதிக்கப்படாமல், நாள் தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தாரே... அதற்காக இத்தண்டனை.

“ஓர் ஏழை தன் வீட்டு வாசலில் கிடப்பதற்கு அனுமதித்த செல்வரைப் பாராட்ட வேண்டாமா? அந்தச் செல்வர் நினைத்திருந்தால், காவலாளிகள் உதவியுடன், இலாசரைத் தன் வீட்டு வாசலிலிருந்து அப்புறப்படுத்தியிருக்கலாமே” என்று செல்வர் சார்பில் வாதாடத் தோன்றுகிறது. செல்வர் இலாசரை அப்புறப்படுத்தியிருந்தால்கூட ஒருவேளை குறைந்த தண்டனை அவருக்குக் கிடைத்திருக்குமோ என்று நான் எண்ணிப் பார்க்கிறேன். புதிராக உள்ளதா? விளக்குகிறேன்.
இலாசர் மீது செல்வர் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்திருந்தால்... அது வெறுப்பைக் காட்டும், எதிர்மறையான நடவடிக்கையாக இருந்திருந்தாலும் பரவாயில்லை, இலாசர் என்ற ஒரு ஜீவன் அங்கு இருந்ததே என்பதையாகிலும் அச்செல்வர் ஏற்றுக்கொண்டார் என்ற உண்மை புலனாகும். இவ்வுவமையில் கூறப்பட்டுள்ள செல்வரைப் பொருத்தவரை, அவர் வீட்டின் படிக்கற்களும், அல்லது படிக்கற்களில் போடப்பட்டிருந்த மிதியடியும், இலாசரும் ஒன்றே... அந்தப் படிக்கற்களாவது அவ்வப்போது கழுவப் பட்டிருக்கும், மிதியடியும் அவ்வப்போது சுத்தம் செய்யப்பட்டிருக்கும், அல்லது புதிதாக மாற்றப்பட்டிருக்கும். இலாசரோ எவ்வகையிலும் கவனிப்பாரற்று கேவலமாக, “அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகேக் கிடந்தார்” (லூக்கா 16: 20) என்று இயேசு குறிப்பிடுகிறார். 'கிடந்தார்' என்ற சொல்லால், இலாசரின் அவலநிலையை இயேசு அழுத்தமாகக் கூறுவதுபோல் தெரிகிறது. செல்வரைப் பொருத்தவரை, அவரது காலடியில் மிதிபட்ட தூசியும் இலாசரும் ஒன்று.
தூசி காலடியில் கிடைக்கும்வரை பிரச்சனை இல்லை. அதே தூசி மேலெழுந்து, கண்களில் விழும்போது, பிரச்சனையாகிவிடும். தூசியாக செல்வரின் வீட்டு வாசலில் கிடந்த இலாசர், மறுவாழ்வில் மேலே உயர்த்தப்பட்டு, அந்தச் செல்வருக்குத் தீர்ப்பு வழங்கும் அளவுகோலாக மாறுகிறார் என்பதை இவ்வுவமையின் இரண்டாம் காட்சியில் காண்கிறோம்.

நாம் வாசிக்கும் கதைகளில், பார்க்கும் திரைப்படங்களில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்படும்போது அதை இரசிக்கிறோம். ஏழ்மையில் இருக்கும் ஒருவர், கதையின் இறுதியில் செல்வச் செழிப்பில் வாழ்வதையும், கதையின் துவக்கத்தில் பெரும் செல்வத்துடன் வாழும் ஒருவர், அனைத்தையும் இழந்து தவிப்பதையும் மறைமுகமாக இரசிக்கிறோம். நாம் இரசிக்கும் இந்தத் தலைகீழ் மாற்றங்களை, செல்வரும், இலாசரும் என்ற புகழ்பெற்ற உவமையின் இரண்டாம் காட்சியில் இயேசு கூறுகிறார். இவ்விருவரின் இவ்வுலக வாழ்வை மூன்று இறைச்சொற்றோடர்களில் சுருக்கமாகக் கூறும் இயேசு, அவர்களுக்கு மறு உலகில் நிகழ்ந்ததை 10 இறைச் சொற்றொடர்களில் விவரித்துள்ளார். இதோ இயேசுவின் வார்த்தைகள்:

லூக்கா நற்செய்தி 16: 22-31
இலாசர் என்ற அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார். அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்து, தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார். அவர், “தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன்என்று உரக்கக் கூறினார். அதற்கு ஆபிரகாம், “மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாதுஎன்றார். அவர், “அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன். எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமேஎன்றார். அதற்கு ஆபிரகாம், “மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்என்றார். அவர், “அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்என்றார். ஆபிரகாம், “அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்ப மாட்டார்கள்என்றார்.

ஏழை இலாசரும், செல்வரும் மறு உலகில் அடையும் மாறுபட்ட வாழ்க்கை, இயேசுவின் காலத்தில் மக்களிடையே நிலவிவந்த ஓர் எகிப்திய கதைக்கு இணையாக உள்ளது. Setme என்ற ஒருவர் ஒரு நாள் இருவரின் மரணத்தைக் காண்கிறார். செல்வர் ஒருவர் இறந்தபின், அவருடைய இறுதி ஊர்வலத்தில் பலர் கலந்துகொள்கின்றனர். ஏழை ஒருவர், எவ்வித இறுதி ஊர்வலமும் இன்றி, இறந்து கிடக்கிறார். இதைக் காணும் Setme, செல்வராக இருப்பதே மேல் என்று சிந்திக்கிறார். அவரது மகன், Si-Osire, உலகைக் காக்க மறு பிறப்பெடுத்தவர். அவர் தன் தந்தையிடம், "நீங்கள் அந்த ஏழையைப் போல் இறப்பீர்கள்" என்று சொன்னதும், Setme மிகவும் வருந்துகிறார். அப்போது, Si-Osire அடுத்த உலகிற்கு தன் தந்தையை அழைத்துச் செல்கிறார். அங்கு, விலை மதிப்பற்ற உடை அணிந்த ஒருவர் கடவுளுக்கு அருகே அமர்ந்துள்ளதைக் காண்கிறார் Setme. அவர் வேறு யாரும் அல்ல, அனாதையாக இறந்து கிடந்த ஏழையே! ஊர்வலமாய் எடுத்துச் சென்று புதைக்கப்பட்ட செல்வரோ, இருள் உலகில் துன்புறுவதையும் Setme காண்கிறார். எகிப்திய கதை இவ்விதம் அமைந்துள்ளது. இவ்வுலகில் நாம் வாழும் வாழ்வுக்குத் தகுந்தவாறு மறு உலக வாழ்வு அமையும் என்ற எண்ணம், ஏறத்தாழ அனைத்து மதங்களும் சொல்லித்தரும் ஓர் உண்மை.

செல்வத்தை நம்பி வாழ்வோருக்கும், இறைவனை நம்பி வாழ்வோருக்கும் கிடைக்கும் மறு உலக வாழ்வை, திருப்பாடல் 49 அழகாக விவரிக்கின்றது.

திருப்பாடல் 49 1-2, 13-19
மக்களினங்களே! அனைவரும் இதைக் கேளுங்கள்; மண்ணுலகில் வாழ்வோரே, யாவரும் செவிகொடுங்கள். தாழ்ந்தோரே, உயர்ந்தோரே, செல்வர்களே, ஏழைகளே, அனைவரும் ஒருங்கே செவிகொடுங்கள்.
தம்மையே மதியீனமாக நம்பியிருப்போரின் முடிவு இதுவே; தம் சொத்திலேயே மகிழ்ச்சி கொள்வோரின் கதி இதுவே. சாவே அவர்களின் மேய்ப்பன்; அவர்கள் நேரடியாகக் கல்லறைக்குள் செல்வர்; ஆனால், கடவுள் என்னுயிரை மீட்பது உறுதி; பாதாளத்தின் பிடியினின்று விடுவித்து என்னைத் தூக்கி நிறுத்துவார்.
சிலர் செல்வர் ஆனாலோ, அவர்களின் குடும்பச் செல்வம் பெருகினாலோ, அவர்களைக் கண்டு நிலைகுலையாதே! ஏனெனில் சாகும்போது அவர்கள் எதையும் எடுத்துப் போவதில்லை; அவர்களது செல்வமும் அவர்கள்பின் செல்வதில்லை. உயிரோடிருக்கையில் அவர்கள் தம்மை ஆசிபெற்றோர் என்று கருதினாலும், 'நீங்கள் நன்மையையே நாடினீர்கள்' என மக்கள் அவர்களைப் புகழ்ந்தாலும், அவர்கள் தம் மூதாதையர் கூட்டத்தோடு சேர்ந்து கொள்வர்; ஒருபோதும் பகலொளியைக் காணப் போவதில்லை.

புதிய ஏற்பாட்டில், திருத்தூதர் யாக்கோபு செல்வர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை நம்மை திடுக்கிட்டு, விழித்தெழச் செய்கிறது:
யாக்கோபு எழுதிய திருமுகம் 5: 1-5
செல்வர்களே, சற்றுக் கேளுங்கள். உங்களுக்கு வரப்போகும் இழிநிலையை நினைத்து அலறி அழுங்கள். உங்கள் செல்வம் மக்கிப்போயிற்று. உங்கள் ஆடைகள் பூச்சிகளினால் அரிக்கப்பட்டுவிட்டன. உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்துவிட்டன. அந்தத் துருவே உங்களுக்கு எதிர்ச் சான்றாக இருக்கும்: அது நெருப்புப்போல உங்கள் சதையை அழித்துவிடும். இந்த இறுதி நாள்களில் செல்வத்தைக் குவித்து வைத்திருக்கின்றீர்களே! உங்கள் வயலில் அறுவடை செய்த வேலையாள்களுக்குரிய கூலியைப் பிடித்துக் கொண்டீர்கள்: அது கூக்குரலிடுகிறது. அறுவடை செய்தவர்களின் கூக்குரல், படைகளின் ஆண்டவருடைய செவிக்கு எட்டியுள்ளது. இவ்வுலகில் ஆடம்பரமாகவும் இன்பமாகவும் வாழ்ந்தீர்கள். கொல்லப்படும் நாளுக்காக உங்கள் உள்ளங்களைக் கொழுக்க வைத்தீர்கள்.

இவ்வாறு, செல்வத்தினால் வரும் ஆபத்துக்கள் பற்றி விவிலியம் முழுவதும் எச்சரிக்கைகள் தரப்பட்டுள்ளன. இத்தகைய எச்சரிக்கைகளுக்குச் செவிகொடுக்காமல் வாழ்ந்த செல்வர், மறு உலகில், தீப்பிழம்பில் வேதனையுற்றபோது, அறிவொளி பெறுகிறார். அவர் அறிவொளி பெற்றபின், ஆபிரகாமுடன் அவர் மேற்கொள்ளும் உரையாடலை அடுத்தவாரம் நாம் சிந்திப்போம்.








All the contents on this site are copyrighted ©.