2013-10-22 16:20:16

பேராயர் சுள்ளிக்காட் : வாழ்வதற்கான உரிமை என்பது பிறப்பதற்கான உரிமையையும் உள்ளடக்கியது


அக்.22,2013. குழந்தைகள், உலகில் வாழ்வதற்கும், வளர்வதற்கும் தேவையான உரிமைகள் மதிக்கப்படவேண்டியதன் அவசியம் குறித்து ஐ.நா.வின் 68வது பொதுஅவைக்கூட்டத்தில் உரையாற்றினார் ஐ.நா.விற்கான திருப்பீடத்தின் நிரந்தரப்பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட்.
வாழ்வதற்கான உரிமையின்றி மற்ற அனைத்து உரிமைகளும் அர்த்தமற்றவை என்பதை வலியுறுத்தி உரைவழங்கிய பேராயர் சுள்ளிக்காட் அவர்கள், குழந்தைகளின் நலன் காப்பாற்றப்படவேண்டுமெனில், கருவுற்றிருக்கும் தாயின் நலன் காப்பாற்றப்பட வேண்டும் என்றும், தாயின் நலன் என்று சொல்லும்போது அது கருவிலிருக்கும் குழந்தையின் நலனையும் உள்ளடக்கியது என்றும் கூறினார்.
வாழ்வதற்கான உரிமை என்பது பிறப்பதற்கான உரிமையையும் உள்ளடக்கியது என்பதால், கருவிலிருந்தே குழந்தைகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதை ஒவ்வோர் அரசும் உறுதிச்செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் பேராயர் சுள்ளிக்காட்.
குழந்தைகளின் நலன் மற்றும் கல்விக்கான உரிமை குறித்தும் வலியுறுத்திய பேராயர் சுள்ளிக்காட் அவர்கள், உடலளவில், மனதளவில், ஒழுக்கரீதியில், சமூக அளவில் மற்றும் ஆன்மீக அளவில் வளர்வதற்கானச் சூழல்களை உருவாக்கித்தரவேண்டியதன் அவசியத்தையும் எடுத்தியம்பினார்.
குழந்தை விற்பனை, பாலியல் தொழிலில் அவர்கள் தள்ளப்படுவது, கீழ்த்தர பாலியல் இலக்கியங்களில் பயன்படுத்தப்படுவது போன்ற குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களையும் சுட்டிக்காட்டிய திருப்பீடத்தின் நிரந்தரப்பார்வையாளர், இவற்றிற்கு எதிரான நடவடிக்கைகளை அரசுகள் எடுப்பதுடன், குடும்பங்களைப் பலப்படுத்தி ஊக்கமளிக்கவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.