2013-10-22 16:21:31

கர்தினால் கிரேசியஸ் சோனியா காந்தியிடம் : அனைத்து இந்தியரையும் பாதுகாப்பதற்கு ஒன்றிணைந்து செயல்படுவோம்


அக்.22,2013. இந்திய அரசியல் அமைப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ள அனைத்துக் குடிமக்களுக்கும் பாதுகாப்பு, நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று சோனியா காந்தி அவர்களிடம் தான் தெரிவித்ததாகக் கூறினார் இந்திய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.

இந்தியாவின் முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர் சோனியா காந்தி அவர்களைத் தான் அண்மையில் சந்தித்தது குறித்து ஆசியச் செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த மும்பை பேராயர் கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இச்சந்திப்பு, சிறப்பு சலுகைகளைப் பெறுவதற்காக இடம்பெற்றது அல்ல எனக் கூறினார்.

இந்தியாவின் அனைத்துச் சிறுபான்மையினருக்கும் சமயச்சுதந்திரம், தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களுக்குச் சம உரிமைகள், சர்ச்சைக்குரிய உணவு பாதுகாப்பு மசோதா போன்ற சில தலைப்புகள் இச்சந்திப்பில் பேசப்பட்டதாகவும் கூறினார் கர்தினால் கிரேசியஸ்.

இச்சந்திப்பின்போது சோனியா காந்தி அவர்கள், இந்தியக் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பணிகளுக்குப் பாராட்டும் நன்றியும் கூறியதாகவும் கர்தினால் கிரேசியஸ் அவர்கள் கூறினார்.

நாட்டின் அனைத்துக் கட்சிகளையும் தான் சந்தித்து, திருஅவையின் நிலையை எடுத்துச்சொல்ல விரும்புவதாகத் தெரிவித்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், திருஅவை சலுகைகளைத் தேடவில்லை, ஆனால் இந்திய அரசியல் அமைப்பின்கீழ் உரிமைகளைச் செயல்படுத்த விரும்புகின்றது என்பதை உறுதிப்படுத்த விரும்புவதாக ஆசியச் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.