2013-10-22 16:29:21

இந்தியாவில் அதிகரிக்கும் குழந்தைத் திருமணங்கள்


அக்.22,2013. இந்தியாவின் பீஹார், ஜார்கண்ட் மாநிலங்களின் கிராமப் பகுதிகளில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்து வருவதாக அரசு-சாரா அமைப்புகள் கூறுகின்றன.

மேலும், தமிழகத்தின் கோவை மாவட்டத்திலும், கடந்த மூன்று ஆண்டுகளாக குழந்தைகள் திருமணம் அதிகரித்து வருவதால், இது குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த மாவட்ட சமூக நலத்துறை திட்டமிட்டுள்ளது.

உலகளவில், இந்தியாவில்தான், அதிகப்படியான குழந்தைத் திருமணம் நடப்பதாக ஐக்கிய நாடுகள் குழந்தை நல அமைப்பான, "யுனிசெப்' தெரிவித்துள்ளது.

18 வயது நிறைவடையாத ஒரு பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஓர் ஆணுக்கும் திருமணம் செய்து வைக்கப்படுவது, குழந்தைத் திருமணம் எனப்படுகிறது. இந்தியாவில், 48 விழுக்காட்டுப் பெண்களுக்கு 18 வயது நிறைவடைவதற்கு முன்பே திருமணம் செயப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது, "குழந்தைத் திருமணம் தடுப்பு சட்டம்- 2006'ன் படி குற்றம். 18 வயது நிறைவடையாதப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளும் ஆண்மகன் மட்டுமின்றி, இத்திருமணத்தை நடத்திய அனைவரும் குற்றவாளிகளாகக் கருதப்படுவர்.

வறுமை, சமூகச்சூழல், பாலியல் தொல்லை போன்ற பல்வேறு காரணங்களால் போதிய விழிப்புணர்வு இன்றி குழந்தைத் திருமணங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால், பெண்களின் கல்வி பாதிக்கப்படுவதுடன், சிறுவயதில் கருவுறுதல், கருச்சிதைவு போன்றவற்றால் நலவாழ்வும் பாதிக்கப்படுகிறது.

மேலும், 15 முதல் 19 வயதுள்ள பெண்கள் கர்ப்பம் தரித்தல் மற்றும் பிரசவத்தின்போது ஏற்படும் பிரச்னைகளால் இறப்புகளின் விகிதம் அதிகரிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


ஆதாரம் : IANS/தினமலர்








All the contents on this site are copyrighted ©.