2013-10-21 15:49:40

வாரம் ஓர் அலசல் – எறிந்த கல்லும் உதிர்த்த சொல்லும்....


அக்.21,2013. RealAudioMP3 ஒருசமயம், பனிமலைகளில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த இடையர்கள், தங்கள் பட்டிகளுக்கு இரவில் வரும் ஆடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததைக் கண்டனர். ஏதாவது வேறு விலங்கினங்கள், கடுங்குளிரிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஆடுகள் போன்று மாறுவேடத்தில் வருகின்றனவோ என்று சந்தேகப்பட்டனர். அதனால் அந்த இடையர்கள் தங்களது ஆடுகள் எவை, ஆடுகள்போன்று ஊடுருவல் செய்யும் விலங்கினங்கள் எவை எனக் கண்டுபிடிப்பதற்கு முயற்சி செய்தும் அவர்களால் முடியவில்லை. அந்த மாறுவேட விலங்குகள் இவர்களை ஏமாற்றிக்கொண்டே இருந்தன. ஒருநாள் அந்த இடையர்களில் இளைஞராய் இருந்தவர் மற்றவர்களிடம், “இந்தப் பிரச்சனையை என்னிடம் விட்டுவிடுங்கள், உண்மையான ஆடுகள் எவை, போலியான ஆடுகள் எவை என்று இன்றிரவு நான் கண்டுபிடிக்கிறேன்” என்று சொன்னார். நீ எப்படிக் கண்டுபிடிப்பாய்? என்று மற்ற இடையர்கள் கேட்க, “இது மிகவும் எளிதானது. நமது பட்டிகளுக்குள் நுழையும் அனைத்து ஆடுகளையும் இன்று இரவு பேச வைப்பேன். அவற்றின் பேச்சிலிருந்து நாம் உண்மையான ஆடுகளை அறிந்து கொள்ளலாம்” என்று பதில் சொன்னார் அந்த இளைஞர்.
அன்றிரவு அந்த இளைஞர் ஆட்டுப்பட்டியின் வாயிலில் நின்று கொண்டார். முதல் ஆடு வாயிலில் நுழைந்தபோது ஓங்கி ஓர் அடி கொடுத்தார். அது வாவ் வாவ் வாவ்... எனக் கத்தியது. உடனே அவர், இது ஆடு கிடையாது, நாய் என்று சொல்லி அதனை விரட்டினார். இரண்டாவது ஆடு நுழைந்தது. அதையும் பலமாக அடித்தார் இளைஞர். அது மியாவ்... மியாவ்.. என முரட்டுத்தனமாகக் கத்தியது. உடனே அந்த இடையர், இது நயவஞ்சகப் பூனை, விரட்டியடியுங்கள் எனக் கத்தினார். அடுத்துவந்த ஆட்டை அந்த இடையர் பலமாக உதைத்தார். அது, ம்..ம்..ம்.. என உறுமியது. உடனே அந்த இடையர், ஐய்யோ... இது அழுக்கான பன்றி. இதையும் விரட்டுங்கள் என்றார். அடுத்து நான்காவதாக வந்த ஆட்டையும் அதேபோல் பலமாக அடித்தார். அது ம்ம்மா..... என கத்தியது. உடனே அந்த இளைஞர், தனது சக இடையர் தோழர்களிடம். இது ஆடு, இதை பட்டிக்குள் அனுப்புங்கள் என்றார். அன்றிரவு அந்த ஆட்டுப்பட்டிக்குள் உண்மையான ஆடுகள் மட்டுமே உறங்கின. மாறுவேடமிட்ட மற்ற விலங்குகளும், அத்துமீறி நுழைந்த விலங்குகளும் வெளியில் குளிரில் வாடின.
அன்பர்களே, இயேசு சபை அருள்தந்தை Peter Ribes அவர்கள் எழுதிய, உவமைகளும் பழங்கதைகளும் என்ற நூலில் இக்கதை காணப்படுகிறது. ஆடுகளுடனே எப்பொழுதும் வாழ்ந்துகொண்டிருக்கும் இடையர்களுக்கு தங்களின் ஆடுகள் எது என்று கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமா?, பொதுவாக இடையர்கள் தங்களின் ஆடுகளை நன்றாக அறிந்தவர்கள், ஆடுகளும் தங்களின் ஆயர்களின் குரலை நன்றாக அறிந்தவை. அப்படியிருக்க இப்படியொரு தேர்வை அந்த இளைஞர் நடத்தியிருக்க வேண்டுமா என்று நாம் சிந்திக்கலாம். அன்பர்களே, நீங்கள் சிந்திப்பது முற்றிலும் சரியே. ஆனால் சில ஆடுகள் சில நேரங்களில் ஆடுகள் போல குரல் கொடுப்பதில்லை. நாய்கள் போல குரைக்கின்றன, சிங்கங்கள்போல கர்ச்சிக்கின்றன, பாம்புகள் போல படமெடுக்கின்றன, பன்றிகள்போல உருமுறுகின்றன, குட்டிப்போட்ட பூனைகள்போல சீருகின்றன. இதேபோல், மனிதர்களும் பல நேரங்களில் மாக்களாக நடந்துகொள்கின்றனர். சில மனிதர்களின் பேச்சுக்கள் மனிதர்கள் பேசுவதுபோல் இருப்பதில்லை. ஆசிரியரின் தகாத வார்த்தையினால் மாணவி தீக்குளிப்பு, மாணவிகளிடம் தகாத வார்த்தைகள் பேசிய ஆசிரியர் சஸ்பெண்ட், கணவரின் சந்தேகச் சொற்களால் பிள்ளைகளுடன் மனைவி தற்கொலை... என்பன போன்ற எத்தனையோ செய்திகளைத் தினமும் தினசரிகளில் வாசிக்கிறோம்.
அரசியலில் இத்தகைய அநாகரிகப் பேச்சுக்கள் அதிகம். அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று வாக்காளர் சமுதாயமும் இதனை சாதாரணமாக ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டது. இவ்வாண்டில் இத்தாலியில் அமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில், ஆப்ரிக்காவின் காங்கோ குடியரசை பூர்வீகமாகக் கொண்ட Cecile Kyenge என்பவர் ஒருங்கிணைப்புத்துறை அமைச்சராகப் பதவியேற்றார். அச்சமயத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவர், இவருக்கு எதிராக கடும், நிறவெறிமிக்க வார்த்தைகளை வெளிப்படுத்தினார். Kyenge, கெரில்லா போன்று இருக்கிறார், இவர் பாலியல் வன்செயலுக்கு உள்ளாக வேண்டும் போன்ற கடும் வார்த்தைகள் அவருக்கு எதிராகப் பேசப்பட்டன.
'நாங்கள் என்ன சிறுநீர் கழித்தா அணைகளை நிரப்ப முடியும்? குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத நிலையில் சிறுநீர் கழிப்பதுகூட சாத்தியமற்றது'' என மகாராஷ்டிராவில் அணைகள் வறண்டு கிடப்பது பற்றிய தனது கிண்டல் பேச்சுக்கு துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் சட்டப்பேரவையில் மன்னிப்பு கேட்ட நிகழ்வு கடந்த ஏப்ரலில் இடம்பெற்றது. மகாராஷ்டிராவில் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வறட்சி நிலவியது. இந்த நிலையில் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடக்கோரி சோலாப்பூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் அச்சமயத்தில் 55 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார். இதற்குத்தான் அந்தக் கிண்டல் பேச்சு. அரசியலில் மட்டுமல்ல, நம் குடும்பங்களிலும், நமது சமூகங்களிலும், ஏன் அன்றாட நமது பேச்சுவழக்குகளிலும்கூட நமது பேச்சுக்கள் அநாகரீகமாக, பிறரைப் புண்படுத்துபவைகளாக, இரட்டை அர்த்தம் உள்ளவையாக, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவனவாக இருக்கின்றன. டிரைவர் வந்தான், பால்காரன் வந்தான், காய்கறிக்காரி வந்தாள்... இப்படி சர்வசாதாரணமாக நமது பேச்சுக்கள் இருக்கின்றன. இவர்களும் மனிதர்கள்தானே! அப்படி நாம் பேசும்போது, ஒருநிமிடம், நம்மை அல்லது நமது குடும்பத்தைச் சார்ந்தவர்களை அந்த இடத்தில் வைத்துப் பார்க்க வேண்டும் என்பது எமது பணிவான வேண்டுகோள்.
அதேநேரம் சிலர் பேசுவதைக் கேட்பதற்கு மக்கள் வெள்ளமெனத் திரள்வதையும் பார்க்க முடிகின்றது. ஒரு குவாட்டரும் ஒரு பிரியாணி பொட்டலமும் கொடுத்து கட்சிக்கூட்டங்களுக்கு வரும் பெருந்திரளான மக்கள் பற்றி நாம் இங்கு சொல்லவரவில்லை. சில ஆன்மீகத் தலைவர்கள், சில சான்றோர்கள், சமூக ஆர்வலர்கள் போன்றோர் பேசுவதைக் கேட்கக்கூடும் மக்கள் பற்றிச் சொல்கிறோம். திருத்தந்தையர்கள் நடத்தும் நிகழ்வுகளுக்கு வரும் மக்கள்வெள்ளத்தை இந்த உரோம் நகரில் அடிக்கடி பார்த்துக்கொண்டிருக்கிறோம். எடுத்துக்காட்டாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று பகல் 12 மணிக்கு நிகழ்த்திய உரையைக் கேட்பதற்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர். ஒரு பத்து நிமிடங்கள் நடைபெறும் இந்நிகழ்வைப் பார்த்துவிட வேண்டுமென்று மக்கள் ஓடிவருவதைப் பார்க்க வேண்டுமே! இஞ்ஞாயிறன்று ஒரு சகோதரியும் நானும் பாதாள இரயிலிலிருந்து இறங்கி வத்திக்கான் வளாகத்துக்குச் சென்றுகொண்டிருந்தோம். பகல் 12 மணி நெருங்கிக் கொண்டிருந்தது. எங்களுக்குமுன் நடந்த ஒருவர் கால்வரை தடுக்கத் தடுக்கப் போட்டிருந்த நீண்ட உடுப்பையும் கையில் பிடித்துக்கொண்டு வத்திக்கான் நோக்கி ஓடியதைப் பார்த்தபோது எங்களுக்கு வியப்பாக இருந்தது. இந்த அளவுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பேச்சு அந்த மனிதரை ஈர்த்துள்ளது. ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்காகக் குரல் கொடுத்ததற்காகத் தலிபான்களால் சுடப்பட்ட 16 வயது சிறுமி மலாலா யூசுப்சாய் அவர்கள் ஐ.நா.வில் பேசியபோது நாடுகளின் தலைவர்கள் வியந்து கேட்டுக்கொண்டிருந்தனர். இன்று உரோமையிலும், பல நகரங்களிலும் சிறுமி மலாலாவின் பெரிய படங்கள் பொது இடங்களை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.
இக்காலத்தில் குழந்தைகளின் பேச்சே பெரியவர்களை வாயடைக்கச் செய்துவிடுகின்றது. ஒருநாள் உறவினர் வீட்டுக்கு ஒரு சிறுமி வந்தார். அவர் வந்தாலே வீடு அமர்ககளமாகிவிடும். அச்சிறுமி கேட்கும் கேள்விகளுக்கு நம்மால் பதில் சொல்ல முடியாது. அன்று அச்சிறுமியைக் காணவில்லை. வீடு அமைதியாக இருந்தது. எங்கு இருக்கிறார் என்று பார்த்தால், வீட்டின் வெளிப்புறத்தில் அமர்ந்துகொண்டு, ஒரு புது பற்பசையை எடுத்து அதை முழுவதும் கையில் தேய்த்துக்கொண்டிருந்தார். என்ன செய்துகொண்டிருக்கிறாய் பாப்பா என்று கேட்டால், பல்துலக்கும்போது நுரை வருது, ஆனால் கையில் தேய்க்கும்போது நுரை வரலையே, அது ஏன்? என்று கேட்டார். நான் அறிவாளி அல்ல என நினைத்து பேச்சை மாற்றி வீட்டுக்குள் அழைத்துவந்து விட்டேன். எனவே, அன்பு நேயர்களே, யாரிடம் பேசினாலும், பேச்சில் கவனம் தேவை. நாக்குதான் பல பெரிய பிரச்சனைகளுக்கு மூல காரணம்.
ஒருவர் ஒரு கேள்வியை நம்மிடம் கேட்கும் போது, நம் மூளை அதற்காக திருப்பிக் கூற ஒன்றுக்கு மேற்பட்ட பதில்களை யோசித்து, நமது நாக்குக்கு அனுப்பிவிடுமாம். நாம் முந்திரிகொட்டையாக இருந்தால், முதல் பதிலை உடனடியாகக் கூறிவிடுவோம். அப்படி இல்லாமல், கொஞ்சம் சூது வாது தெரிந்த ஆளாக இருந்தால், அந்தப் பதில்களில் நல்லதைத் தேர்ந்தெடுத்துக் கூறுவோம். எவ்வளவு பதில்களைச் சிந்திக்கறோமோ, அவ்வளவுக்கு நாம் அறிவாளி. எந்தளவுக்குச் சிறந்த பதில்களைத் தேர்ந்தெடுக்கிறோமோ, அவ்வளவுக்கு நாம் புத்திசாலி என்று பேச்சாற்றல் பற்றிய ஒரு கருத்தரங்கில் சொல்லப்பட்டது. எனவே பேச்சில் கவனமாக இருந்தால் எத்தனையோ சங்கடங்களையும், சண்டைகளையும் தவிர்த்து நிம்மதியாக வாழலாம், பிறரையும் நிம்மதியாக வாழ விடலாம்.
தொலைபேசிப் பேச்சுக்களாலும் பல பிரச்சனைகள் ஏற்படுவதால், அவற்றிலும் கவனம் தேவை. இந்தியாவில் 2012ம் ஆண்டு மே மாத நிலவரப்படி, அலைபேசிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 92 கோடியே 93 இலட்சத்து 70 ஆயிரம். அன்பர்களே, தொலைபேசியில் பேசுவதற்கென்று சில வரைமுறைகள் இருக்கின்றன. தொலைபேசி, பேசுவதற்குத்தானே, யாரையும் எப்போது வேண்டுமானாலும் கூப்பிட்டுப் பேசலாம் என்பதற்காக அல்ல. தொலைபேசி என்பது அவசர, அத்தியாவசியச் செய்திகளைச் சொல்வதற்காக ஏற்படுத்தப்பட்ட சாதனம்.
பேச்சு என்பது வெறும் நாக்கின் சுழற்சி மட்டுமே அல்ல. நாம் பேசும்போது மனம், உடல் மூளை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு இருப்பது அவசியம். பேச்சு நம் எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஒரு செயல். எனவே அதில் மிகுந்த கவனம் தேவை. எறிந்த கல்லும், பேசிய சொல்லும் அதன் விளைவை ஏற்படுத்தாமல் திரும்பி வராது. எனவே நாம் இதயத்திலிருந்து, இதயத்தின் நிறைவிலிருந்து பேச வேண்டும்.
சீராக் புத்தகம் சொல்கிறது – பொய் சொல்ல விரும்பாதே. பொய் சொல்லும் பழக்கம் நன்மை தராது. பெரியோர் கூட்டத்தில் உளறாதே. பின்னிப் பின்னிப் பேசாதே. எல்லாவகைக் காற்றிலும் தூற்றிக் கொள்ளாதே. முன்பின் முரண்படாமல் பேசு. பொறுத்திருந்து விடை கூறு. உனக்குத் தெரிந்தால், மறுமொழி கூறு. இல்லையேல் வாயை மூடிக்கொள். பெருமையும் சிறுமையும் பேச்சினால் வரும். நாக்கே ஒருவருக்கு வீழ்ச்சியைத்தரும். புறங்கூறுபவன் எனப்பெயர் வாங்காதே. உன் நாவால் மற்றவர்களுக்குக் கண்ணி வைக்காதே. புரட்டிப் பேசும் இரட்டை நாக்கினருக்கு உரியது கடும் கண்டனம்.(சீராக் 5, 9-15)







All the contents on this site are copyrighted ©.