கிறிஸ்தவ சபைகள் ஒரே குடும்பமாக ஒத்திணங்கிவருவது நிச்சயமன நிகழும், திருத்தந்தை
அக்.,21,2013. இறையியல் பேச்சுவார்த்தைகள் மூலமாக மட்டுமல்ல, பல்வேறு மேய்ப்புப்பணி நடவடிக்கைகளின்
ஒத்துழைப்பு வழியாகவும், ஆன்மீக ஒன்றிப்பை வளர்க்கும் அர்ப்பணம் வழியாகவும், கடந்த 10
ஆண்டுகளில் இடம்பெற்றுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் குறித்து மகிழ்ச்சி அடைவதாக
தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். உலக லூத்தரன் கூட்டமைப்பின் அங்கத்தினர்களையும்,
லூத்தரன்-கத்தோலிக்க ஒன்றிப்பு அவையின் அங்கத்தினர்களையும் இத்திங்களன்று திருப்பீடத்தில்
சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்விருகிறிஸ்தவ சபைகளும் ஒரே
குடும்பமாக ஒத்திணங்கிவருவது நிச்சயமாக நிகழும் என்றும், அதற்கு இறைவனே நம் வழிகாட்டியாக
இருப்பார் என்றும் கூறினார். லூத்தரன் சீர்திருத்தச் சபையின் 500ம் ஆண்டுக்கொண்டாட்டங்கள்
2017ம் ஆண்டு இடம்பெறவுள்ளதைப்பற்றியும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,
அந்த வரலாற்று உண்மைநிலைகளை ஆராய்வதோடு, கத்தோலிக்கர்களும் லூத்தரன் கிறிஸ்தவசபையினரும்
ஒருவருக்கு எதிராக மற்றவர் இதுவரை ஆற்றியுள்ள தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்போம் எனவும்
அழைப்புவிடுத்தார். ஒன்றிப்பை நோக்கி நாம் மேற்கொள்ளும் பயணத்தில், பொறுமை, பேச்சுவார்த்தை,
புரிந்துகொள்ளுதல் ஆகியவை இன்றியமையாதவை என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.