2013-10-21 15:51:01

கற்றனைத்தூறும்...வெல்லம்


பருமன், நீரிழிவு நோய் உள்ளிட்ட பல பிரச்சனைகளாலும் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவர்கள் விதிக்கிற தடைப்பட்டியலில் முதன்மையானது இனிப்பு. ஆனால், இந்தத் தடை சர்க்கரைக்கே தவிர வெல்லத்துக்கு அல்ல. இரும்பு, நார்ச்சத்து, கால்சியம் ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது வெல்லம். அது உணவுக்குழாய், வயிறு, நுரையீரல் என உடலின் உள் உறுப்புகளைச் சுத்தம் செய்யக்கூடியது. அதனால்தான் பலரும் உணவு உண்டபிறகு ஒரு துண்டு வெல்லம் சாப்பிடுகிறார்கள். செரிமானத் திரவங்களைத் தூண்டிவிட்டு, ஜீரணத்தைச் சரிசெய்கிற சக்தி வெல்லத்துக்கு உண்டு. வெல்லம் இரத்தத்தையும் சுத்தப்படுத்தக்கூடியது. சர்க்கரை தயாரிப்பின்போது, அதை வெண்மையாக்குவதற்காக அதில் சில வேதியப் பொருள்களைச் சேர்ப்பதால், இரும்புச்சத்து அழிக்கப்படுகிறது. வெல்லம் பனைமரத்திலிருந்தும் எடுக்கப்படுகிறது. தண்ணீர்ப் பசையின்றி, கெட்டியாகக் காய்ச்சப்பட்ட கரும்புச் சாற்றிலிருந்து வெல்லம் எடுக்கப்படுகிறது. கரும்புச் சாற்றை காய்ச்சும்போது, கெட்டி வெல்லமாகும் பதத்துக்கு முன்பே இறக்கப்படுகிற இளம் வெல்லமானது, மருந்துத் தயாரிப்பில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பனைமரச் சாற்றை, குறிப்பிட்ட வெப்பநிலையில் காய்ச்சி பனம் சர்க்கரையும் பனை வெல்லமும் தயாரிக்கிறார்கள். பனைவெல்லம் பசியைத் தூண்டும். முழுக்க சுத்தப்படுத்தாத கெட்டியான கருநிற வெல்லத்தை கருப்பட்டி என்றும், சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரையை பனங்கற்கண்டு என்றும் சொல்கிறோம். பாலில் பனங்கற்கண்டு சேர்த்துக் காய்ச்சிக் குடித்தால் சளி முறியும். உடல் சூட்டையும் குறைக்கும். வெல்லத்தைவிட, பனைவெல்லம் இன்னும் சிறந்தது. அதில் பி1, பி2, பி3, பி6 பி12 ஆகிய சத்துகள் உள்ளன. மூட்டு வலிக்கு முக்கிய காரணமே அமிலப் பிரச்சனைதான். அது மட்டுமின்றி, தசைவலி, மூட்டு இணைப்புகளில் வலி இருப்போருக்கும் சர்க்கரை வேண்டாம் என்றும், அதற்குப் பதில் வெல்லம் எடுத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிற கஞ்சி மாதிரியான உணவுகளில் சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சேர்த்துக் கொடுக்கலாம். மூன்று வயதுக்கு மேலான குழந்தைகளுக்கு உடைத்த கடலை, வேர்க்கடலை உருண்டைகளில் வெல்லம் சேர்த்துச் செய்து தரலாம். பழச்சாறு போன்றவற்றில் சர்க்கரை சேர்த்தால், கலோரி அதிகமாகும். அதைத் தவிர்த்து வெல்லம் சேர்த்துத் தரலாம்.

ஆதாரம் : தினகரன்







All the contents on this site are copyrighted ©.