2013-10-19 16:24:09

சிஸ்டீன் சிற்றாலயத்தில் மாசுக் கட்டுபாட்டு அமைப்புகள்


அக்.19,2013. வத்திக்கான் அருங்காட்சியத்திலுள்ள சிஸ்டீன் சிற்றாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய குளிர்சாதன மற்றும் காற்று சுத்திகரிப்பு அமைப்புகள், காற்று மாசுக்கேடு அளவை குறிப்பிடத்தக்க வகையில் குறைக்கவில்லையெனில் அவ்வாலயத்தைத் தரிசிப்பவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டியிருக்கும் என்று வத்திக்கான் அருங்காட்சியத் தலைவர் அறிவித்துள்ளார்.
வத்திக்கான் அருங்காட்சியத் தலைவர் Antonio Paolucci இவ்வாரத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது இதனை அறிவித்தார்.
2014ம் ஆண்டு இறுதியில் செயல்படத் தொடங்கும் இந்தப் புதிய மாசுக் கட்டுபாட்டு அமைப்புகள், சிஸ்டீன் சிற்றாலயத்திலுள்ள புகழ்பெற்ற ஓவியங்களை ஏற்கனவே மங்கச்செய்துவரும் தூசி, ஈரப்பசை, கார்பன்டை ஆக்ஸைடு ஆகியவற்றைக் அகற்றும் என்பதில் நம்பிக்கை இருப்பதாக Paolucci தெரிவித்தார்.
இந்தப் புதிய மாசுக் கட்டுபாட்டு அமைப்புகள் நன்றாக வேலை செய்யவில்லையெனில் பயணிகளின் எண்ணிக்கையைக் கட்டுபடுத்தும் வேதனையான நடவடிக்கையை எடுக்கவேண்டியிருக்கும் என்றும் Paolucci கூறினார்.
2013ம் ஆண்டில் ஏறக்குறைய 55 இலட்சம் பேர் வத்திக்கான் அருங்காட்சியத்தைப் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.