2013-10-18 16:19:53

வயதான அருள்பணியாளர்களையும், அருள்சகோதரிகளையும் சந்தியுங்கள், திருத்தந்தை பிரான்சிஸ்


அக்.18,2013. இறைவனுக்குத் தங்களை அர்ப்பணித்துள்ள வயதான அருள்பணியாளர்களையும், அருள்சகோதரிகளையும் சந்தியுங்கள், இது உண்மையான திருப்பயணமாக அமையும் என்று, இவ்வெள்ளி காலை, புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்தியத் திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித பவுல் முதன்முறை வழக்காடியபோது எவரும் அவர்பக்கம் இருக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும், அவர் திமொத்தேயுவுக்கு எழுதிய 2வது திருமடல், 4ம் பிரிவிலுள்ள பகுதியை(2திமொ.4:10-17) மையமாக வைத்து மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மூப்பினால் தனிமையை அனுபவிக்கும் நல்ல அருள்பணியாளர்களையும், அருள்சகோதரிகளையும் சந்திக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இயேசுவின் திருத்தூதர்கள் இளமையாகவும், உடல்வலிமையோடும் இருந்தனர், அவர்களின் போதனையால் பேய்கள் ஓடின என்றுரைத்த திருத்தந்தை, புனித பவுலும் இளமையில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார், அவரும் தனது வயதான காலத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்கவில்லை என்றும் கூறினார்.
திருத்தூதரின் முதுமை காலம் பற்றிச் சிந்திக்கும்போது, மோசோ, திருமுழுக்கு யோவான், பவுல் ஆகிய மூவரும் நினைவுக்கு வருகின்றனர் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் மக்களை, எதிரிகளிடமிருந்து துணிச்சலுடன் அழைத்துவந்த மோசேயால் வாக்குறுதி செய்யப்பட்ட நாட்டுக்குள் நுழைய முடியவில்லை, அதேபோல் திருமுழுக்கு யோவானும் கடைசி காலத்தில் வேதனையை அனுபவித்தார் என்று உரைத்தார்.
எல்லாரும் கைவிட்டனர் என்றுரைத்த புனித பவுல், ஆண்டவர் தன் பக்கம் நின்று தனக்கு வலுவூட்டினார், அதன்மூலம் நற்செய்தியை தொடர்ந்து அறிவிக்க தன்னால் முடிந்தது என்றும் கூறியதாகத் தெரிவித்தார் திருத்தந்தை.
திருத்தூதர்களின் இறுதிக்காலம் பற்றி நினைக்கும்போது வயதான குருக்களும் கன்னியரும் வாழ்கின்ற அப்போஸ்தலிக்க மற்றும் புனித இடங்கள் நினைவுக்கு வருகின்றன எனவும், இறைவனின் வருகைக்காகக் காத்திருக்கும் இவர்களை நாம் மறக்கக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
இவ்விடங்கள் பற்றி ஆழமாகச் சிந்தித்தால் இவை அழகான இடங்கள் எனவும், கிறிஸ்தவர்கள் இவ்விடங்களுக்குத் திருப்பயணம் மேற்கொள்ள வேண்டுமெனவும் தனது மறையுரையில் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.