2013-10-18 16:17:10

திருத்தந்தை பிரான்சிஸ்:தூய ஆவி, ஆசியக் கண்டத்தில் நீதியையும் அமைதியையும் கொண்டுவருவாராக


அக்.18,2013. எனது இதயத்துக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் மாபெரும் ஆசியக் கண்டத்திலும், பிலிப்பின்ஸ் நாட்டிலும் தூய ஆவி படைப்பைப் புதுப்பித்து நீதியையும் அமைதியையும் கொண்டுவருவாராக என்று வாழ்த்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில், புதியவழியில் நற்செய்தி அறிவிப்புப் பணியை மையப்படுத்தி நடைபெற்ற மூன்று நாள் ஆசியக் கருத்தரங்கில் ஒலி-ஒளிச்(காணொளி) செய்தியில் இவ்வெள்ளியன்று பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
பிலிப்பின்சிலிருந்தும் ஆசியாவின் பிற நாடுகளிலிருந்தும் கலந்து கொண்ட ஏறக்குறைய ஆறாயிரம் பிரதிநிதிகளிடம் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வுலகின் அரசியல், வணிகம், கலைகள், அறிவியல், தொழில்நுட்பம், சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் இயேசு அறியப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
இக்கருத்தரங்கு மூலம் இப்பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் இயேசுவின் அன்புப் பிரசன்னத்தை மீண்டும் அனுபவித்திருப்பார்கள் என்று தான் நம்புவதாக உரைத்த திருத்தந்தை, இப்பிரதிநிதிகள் திருஅவையை இன்னும் அதிகமாக அன்புகூர்ந்து, மனத்தாழ்மையோடும் மகிழ்வோடும் அனைத்து மக்களுடன் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
ஏழைகள், நோயாளிகள், கைவிடப்பட்டவர்கள், இளையோர் மற்றும் குடும்பங்களுக்கு இறைவனின் கருணையை எடுத்துச் செல்வதில் களைப்படைய வேண்டாம் எனவும் வலியுறுத்திய திருத்தந்தை, தான் அனைவருக்காகவும் செபிப்பதாகவும் உறுதி கூறினார்.
இறுதியில், பிலிப்பின்ஸ் நாட்டின் தகாலோ மொழியில், ஆசியாவும், பிலிப்பின்ஸும் வாழ்க என வாழ்த்தினார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று ஆங்கிலத்தில் வழங்கிய இந்த ஒலி-ஒளிச்(காணொளி) செய்தி, அவர் திருத்தந்தையாகத் தலைமைப்பணியை ஏற்றபின் ஆங்கிலத்தில் வழங்கியுள்ள முதல் செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.
இப்புதனன்று மனிலாவில் தொடங்கிய புதியவழியில் நற்செய்தி அறிவிப்புப் பணி குறித்த இந்த முதல் ஆசியக் கருத்தரங்கு இவ்வெள்ளியன்று நிறைவடைந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.