2013-10-18 16:22:25

ICEL அனைத்துலகப் பணிக்குழுவுக்குத் திருத்தந்தை பாராட்டு


அக்.18,2013. ICEL என்ற அனைத்துலக ஆங்கிலத் திருவழிபாட்டுப் பணிக்குழுவின் கடந்த ஐம்பது ஆண்டு உழைப்பின் பலன்கள், எண்ணற்ற கத்தோலிக்கரின் செபத்துக்கு மட்டுமல்லாமல், விசுவாசத்தைப் புரிந்து கொள்வதற்கும் உதவியுள்ளன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று கூறினார்.
ICEL அனைத்துலகப் பணிக்குழு உருவாக்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டைக் கொண்டாடுவதற்காக உரோமையில் கூட்டம் நடத்திய இக்குழுவின் 25 பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, பொதுவான குருத்துவத்தைச் செயல்படுத்தவும், திருஅவையின் மறைபரப்புப் பண்பை விரிவாக்கவும், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கப் போதனைகளின் அனைத்துத் தலைப்புக்களுக்கும் இப்பணிக்குழு உதவியுள்ளது எனவும் தெரிவித்தார்.
திருவழிபாட்டில் ஏற்பட்ட மறுமலர்ச்சியை வைத்தே இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கப் போதனைகள் பலரைச் சென்றடைந்துள்ளன என்று முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் கூறியதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ், இப்பணிக்குழுவின் உழைப்பை ஊக்கப்படுத்தினார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் திருவழிபாடு குறித்த கொள்கைத்திரட்டு விடுத்த அழைப்பின்படி, திருவழிபாட்டில் மாபெரும் புதுப்பித்தலை அமல்படுத்துவதற்கு உதவும் நோக்கத்தில் ICEL அனைத்துலகப் பணிக்குழு உருவாக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.