2013-10-17 16:08:41

வத்திக்கான் தொலைக்காட்சி மையத்தின் முப்பதாவது ஆண்டு நிறைவு விழா


அக்.17,2013. வத்திக்கான் தொலைக்காட்சி மையத்தில் உள்ள காமிராக்களின் கண்கள் அன்பினால் தூண்டப்பட்டவை என்று வத்திக்கான் வானொலியின் இயக்குனராகப் பணியாற்றும் அருள் பணியாளர் Federico Lombardi அவர்கள் கூறினார்.
முன்னாள் திருத்தந்தை, முத்திப்பேறு பெற்ற 2ம் ஜான் பால் அவர்களின் ஆர்வத்தால், 1983ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி நிறுவப்பட்ட வத்திக்கான் தொலைக்காட்சி மையம், அக்டோபர் 18, இவ்வெள்ளியன்று தன் முப்பதாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
இத்தருணத்தையோட்டி, உரோம் நகரில் நடைபெறும் ஒரு விழாவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இத்தாலியின் அரசுத்தலைவர் Giorgio Napolitano அவர்களும் வழங்கும் செய்திகள் வாசிக்கப்படும்.
இவ்விழாவில் வெளியிடப்படவிருக்கும் "புனித பேதுருவின் காமிராக்கள்" என்ற பெயர்கொண்ட நூலில், இந்த மையத்தின் முன்னாள் இயக்குனராக கடந்த ஆண்டு வரை பணியாற்றிய அருள் பணியாளர் Lombardi அவர்கள், தன் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த மையம் பதிவு செய்த அனைத்து காட்சிகளிலும், மறைந்த திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் இறுதி நாட்களை தொலைக்காட்சி காமிராக்கள் பதிவு செய்தது தன்னை ஆழமாகப் பாதித்தது என்றும், பேசமுடியாத நோயுற்ற நிலையிலும் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் கலந்துகொண்ட விழாக்களில், அவரது பிரசன்னத்தை காட்டிய காமிராக்கள், திருத்தந்தையின் அன்பைப் பறைசாற்றின என்றும் அருள் பணியாளர் Lombardi அவர்கள் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.