2013-10-17 16:05:31

பாலஸ்தீன அரசுத் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சந்திப்பு


அக்.17,2013. திருப்பீடத்தை ஓர் இல்லமாக நீங்கள் கருதலாம், இங்கு தாங்கள் வந்திருப்பது எனக்குப் பெருமை தருகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாலஸ்தீன அரசுத் தலைவரிடம் கூறினார்.
இவ்வியாழன் காலையில், பாலஸ்தீன அரசுத் தலைவர் Mahmoud Abbas Abu Mazen அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து, 30 நிமிடங்கள் உரையாடியபோது, திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
அமைதியின் நகர் என்றழைக்கப்படும் பெத்லகேம் நகரின் உருவம் பொறிக்கப்பட்ட ஓர் ஓவியத்தையும், பாலஸ்தீனம் ஓர் அரசாக அறிவிக்கப்பட்டபின், அங்கு அச்சிடப்பட்ட ஒரு விவிலியத்தையும் அரசுத்தலைவர் Abu Mazen அவர்கள், திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார்.
புனித பேதுரு பசிலிக்காவின் தூணைப் போன்று உருவாக்கப்பட்டிருந்த ஒரு சிறப்பான பேனாவை, திருத்தந்தை அவர்கள், அரசுத் தலைவருக்குப் பரிசாக அளித்தபோது, அரசுத் தலைவர் ஒவ்வொரு நாளும் பலமுறை கையெழுத்திடுவதற்கு இது உதவும் என்பதை நகைச்சுவையாகக் கூறினார்.
இஸ்ரேல் நாட்டுடன் அமைதி ஒப்பந்தம் உருவாகி, அதில் தான் கையெழுத்திடுவதே தன் தலைசிறந்த ஆவல் என்று அரசுத்தலைவர் Abu Mazen அவர்கள் பதிலிறுத்தார்.
திருத்தந்தையைச் சந்தித்தபின், திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுத் துறைத் தலைவர், பேராயர் தோமினிக் மம்பெர்த்தி அவர்களையும், பாலஸ்தீன அரசுத்தலைவர் சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பிற்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அரசுத் தலைவர் Abu Mazen அவர்கள், தான் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் மேற்கொண்ட இந்த முதல் சந்திப்பு, மிகுந்த மகிழ்வைத் தந்தது என்றும், புனித பூமியைக் காண திருத்தந்தை வரவேண்டும் என்ற அழைப்பை தான் விடுத்ததாகவும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.