2013-10-17 16:11:46

திருத்தந்தையின் நிகழ்வுகளை, இத்தாலியத் தொலைக்காட்சியில் காண்போரின் எண்ணிக்கை கூடியுள்ளது


அக்.17,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றதிலிருந்து அவர் பங்கேற்கும் நிகழ்வுகளை, இத்தாலியத் தொலைக்காட்சியில் காண்போரின் எண்ணிக்கை கூடியுள்ளதாக, “Il Fatto Quotidiano” என்ற இத்தாலிய நாளிதழ் புள்ளிவிவரங்களுடன் வெளியிட்டுள்ளது.
திருத்தந்தை ஒவ்வொரு ஞாயிறு மதியவேளையில் வழங்கும் மூவேளை செப உரை நிகழ்வைக் காண்போரின் எண்ணிக்கை, கடந்த ஆறு மாதங்களாக 7,50,000 பேர் என்ற அளவு கூடியிருப்பதாக, RAI 1 என்ற இத்தாலிய தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
மார்ச் மாதம் 17ம் தேதி, ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய முதல் மூவேளை செப உரையை 45 விழுக்காட்டு மக்கள் கண்டனர் என்று கூறும் RAI தொலைகாட்சி, வழக்கமாக, இத்தாலியப் பார்வையாளர்களை அதிகமாகக் கவரும் கால்பந்து போட்டிகளைக் காணும் மக்களின் எண்ணிக்கை போல இது அமைந்திருந்தது என்றும் அறிவித்துள்ளது.
அக்டோபர் 4ம் தேதியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அசிசி நகருக்குச் சென்றபோது, அங்கு செயலாற்றும் TV 2000 என்ற நிலையம் செய்த நேரடி ஒளிபரப்பு, இத்தாலியில் அதிகமான மக்களால் தொடரப்பட்டது என்று அந்நிலையம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : CNS








All the contents on this site are copyrighted ©.