2013-10-17 15:53:42

கற்றனைத்தூறும் ... தரையில் அதிவேகமாக ஓடும் விலங்கினம்


பாலூட்டி விலங்குகளிலேயே வேகமாக ஓடுவதிலும், எதிரியை வீழ்த்துவதிலும் முதலிடத்தில் இருப்பது சிறுத்தை. இதன் வேகம் மணிக்கு 70 கிலோ மீட்டர். ஆனால் இந்த வேகத்தில் அதிகபட்சம் 8 நிமிடம்வரை மட்டுமே இதனால் ஓட முடியும். ஆனால் அதற்குள் தனக்கு முன்னே ஓடும் தன் இரையை கவ்விப் பிடித்துவிடும். சிறுத்தையின் நீண்ட வால், இது வேகமாக ஓடும்போதும், ஓடிக்கொண்டே திரும்பும்போதும் கீழே விழாமல் சமநிலைபபடுத்திக்கொள்ள உதவுகின்றது. சிறுத்தைகளுள் ஐந்து வகைகள் உள்ளன. நான்கு வகைகள் ஆப்ரிக்கக் காடுகளிலும், ஒருவகை ஈரான் பாலைவனப் பகுதியிலும் காணப்படுகின்றன. சிறுத்தைகளில் ஆண் சிறுத்தைகளும், பெண் சிறுத்தைகளும் வேறுபட்ட வாழ்க்கைமுறையினைக் கொண்டுள்ளன. பெண் சிறுத்தைகள், தாங்கள் ஈன்ற குட்டிகளுடன் இருபது மாதங்கள்வரை வாழும். மற்ற நேரங்களில் தனிமையாகவே வாழும். மற்ற சிறுத்தைகளுடன் இவை சண்டையிடுவதில்லை. தாய்ச் சிறுத்தை, தனது குட்டிகளை, சிங்கம் போன்ற கொடிய விலங்குகளிடமிருந்து காப்பாற்றவும், சுத்தமான இருப்பிடத் தேவைக்காகவும், தனது இருப்பிடத்தை பலமுறை மாற்றிக்கொண்டே இருக்கும். அப்போது குட்டிகளைத் தனது வாயால் கவ்வியே தூக்கிச் செல்கின்றன. ஆண் சிறுத்தைகளைத் தனித்துக் காண்பது அபூர்வமே. ஆண் சிறுத்தைகள், நான்கு முதல் ஐந்து ஆண் சிறுத்தைகளை மட்டுமே கொண்ட குழுவாகவே வாழுகின்றன. இவைகள் பெரும்பாலும் ஒரு தாய்ச்சிறுத்தை ஒரே பிரசவத்தில் ஈன்ற குட்டிகளாகவே இருக்கும். குழுவாக வாழும் ஆண் சிறுத்தைகள் தங்களுக்கான எல்லைகளை வரையறை செய்த பின்பு தங்கள் சிறுநீரைக் கொண்டு எல்லைகளைக் குறிக்கின்றன. இதிலிருந்து வரும் வாசனையே எல்லைக்கோடாக அமைகின்றன. இந்த எல்லையைத் தாண்டும் சிறுத்தைகளுக்குள் கடும் சண்டை ஏற்படும். சில நேரங்களில் இந்தச் சண்டை மரணத்திலேயே முடிவடைகின்றன.

ஆதாரம் : Amudamtamil.com







All the contents on this site are copyrighted ©.