2013-10-17 16:09:15

"என் சார்பில் நீங்கள் சென்று ஏழைகளைச் சந்தியுங்கள்" - திருத்தந்தை பிரான்சிஸ்


அக்.17,2013. "நான் Buenos Aires பேராயராகப் பணியாற்றியபோது, அடிக்கடி வெளியேச் சென்று ஏழைகளைச் சந்திக்க முடிந்தது, தற்போது அது முடியாது என்பதால், என் சார்பில் நீங்கள் சென்று ஏழைகளைச் சந்தியுங்கள்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னிடம் கூறியதாக, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
திருத்தந்தையின் தர்மப்பணிகளை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ள பேராயர் Konrad Krajewski அவர்கள், வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவுக்கு தன் பணியைப் பற்றி அண்மையில் அளித்த பேட்டியொன்றில், இவ்விதம் கூறியுள்ளார்.
திருத்தந்தையின் ஆசீர் அடங்கிய சிறப்பு இதழ்களில் கையெழுத்திட்டு, அதன் வழியாக வரும் தொகையை ஏழைகளின் உதவிக்கென அனுப்புவது தர்மப்பணி மையத்தின் முக்கியப் பணியாக அமைத்தது என்றும், இவ்வாறு கையெழுத்திடுவது மட்டும் தன் பணியல்ல, மாறாக, ஏழைகளைச் சென்று சந்திப்பதும் தன் பணி என்பதை திருத்தந்தை தனக்குக் கூறியதாக பேராயர் Krajewski எடுத்துரைத்தார்.
வறியோர் அனுப்பும் கடிதங்களுடன் பங்குத் தந்தையின் பரிந்துரையும் இணைந்து அனுப்பப்பட வேண்டும் என்ற நியதியைக் கடந்து, தற்போது, வறியோர் நேரடியாக எழுதும் மடல்களுக்கும் திருத்தந்தை பதில் தருகிறார் என்றும் பேராயர் Krajewski தன் பேட்டியில் கூறினார்.

ஆதாரம் : CNA/EWTN








All the contents on this site are copyrighted ©.