2013-10-17 16:07:42

இடிந்துள்ள கோவில்களைக் கட்டியெழுப்புவதைவிட, இடிந்துகிடக்கும் மக்கள் வாழ்வைக் கட்டியெழுப்புவது அவசரமானத் தேவை - பிலிப்பின்ஸ் பேராயர் Villegas


அக்.17,2013. நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கோவில்களைக் கட்டியெழுப்புவதைவிட, இடிந்துகிடக்கும் மக்கள் வாழ்வைக் கட்டியெழுப்புவது அவசரமானத் தேவை என்று பிலிப்பின்ஸ் ஆயர் பேரவைத் தலைவராகப் பொறுப்பேற்கவிருக்கும் பேராயர் Socrates Villegas அவர்கள் கூறினார்.
கடந்த செவ்வாயன்று, பிலிப்பின்ஸ் நாட்டின் மத்தியப் பகுதியைத் தாக்கிய நிலநடுக்கத்த்தால், Cebu நகரில் உள்ள புகழ்பெற்ற குழந்தை இயேசு பேராலயம் உட்பட 58 கோவில்கள் இடிந்து கிடக்கின்றன.
இந்நிலையில், எனது கோவில், எனது மறைமாவட்டம் என்ற கோணத்தில் சிந்திக்காமல், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களின் தேவைகளை முன்னிறுத்த வேண்டும் என்று பேராயர் Villegas அவர்கள், இவ்வியாழனன்று அனைத்து அருள் பணியாளர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
துயர் துடைப்புப் பணிகளுக்கென ஆயர் பேரவையின் சார்பில் அவசர உதவித் தொகையொன்று Bohol பகுதி மக்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
நிலநடுக்கத்தால் இதுவரை இறந்தோரின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது என்றும், 34 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 7.2 ரிக்டர் அளவு சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, குறைந்தது 100 நில அதிர்வுகள் உணரப்பட்டன என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : UCAN








All the contents on this site are copyrighted ©.