2013-10-16 15:51:46

திருப்பயணங்கள் அமைதியை வளர்க்கும் பாலங்களாக அமைவதையே இஸ்ரேல் அரசு விரும்புகிறது - இஸ்ரேல் நாட்டு அமைச்சர்


அக்.16,2013. புனித பூமியில் திருப்பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு நல்ல சேவையை வழங்குவதால், அவர்கள், தங்கள் நாடுகளில், புனித பூமியைப் பற்றி எடுத்துரைக்கும் நல்லெண்ணத் தூதர்களாக மாறுவதையே நாங்கள் விரும்புகிறோம் என்று எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை Fouad Twal அவர்கள் கூறியுள்ளார்.
அக்டோபர் 14, இத்திங்களன்று முதுபெரும் தந்தை Twal அவர்களும், இஸ்ரேல் நாட்டு சுற்றுலாத் துறை அமைச்சர் Uzi Landau அவர்களும் மேற்கொண்ட வரலாறு காணாத ஒரு சந்திப்பின் இறுதியில், முதுபெரும் தந்தை Twal அவர்கள் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
இச்சந்திப்பு, கத்தோலிக்கத் திருஅவைக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே புதியதொரு சகாப்தத்தைத் துவக்கியுள்ளது என்றும், திருப்பயணங்கள் அமைதியை வளர்க்கும் பாலங்களாக அமைவதையே இஸ்ரேல் அரசு விரும்புகிறது என்றும் அமைச்சர் Landau அவர்கள் தெரிவித்தார்.
2012ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி முதல், இவ்வாண்டு நவம்பர் 24ம் தேதி முடிய நடைபெற்றுவரும் நம்பிக்கை ஆண்டின் ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக, நவம்பர் 17, ஞாயிறன்று, நாசரேத்தில் உள்ள Precipice என்ற மலையில், முதுபெரும் தந்தை Fouad Twal அவர்கள் ஆற்றும் ஒரு சிறப்புத் திருப்பலியில், இத்தாலி, ஸ்பெயின், பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து வரும் திருப்பயணிகள் கலந்துகொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : ICN








All the contents on this site are copyrighted ©.