2013-10-16 15:32:00

திருஅவை அப்போஸ்தலிக்கத் தன்மை கொண்டது,திருத்தந்தை பிரான்சிஸ்


அக்.16,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நடத்திவரும் பொது நிகழ்வுகளுக்கு காலநிலை ஏற்றதாகவே அமைந்து வருகிறது. இப்புதன் காலையில்கூட மழை தூரிக்கொண்டிருந்தாலும் பின்னர் அது நின்றுவிட்டது. கதிரவனின் வெண்கதிர்களும் இலேசாக வீசிக் கொண்டிருந்தன. இக்காலநிலை வத்திக்கான் தூய பேதுரு வளாகத்திலும் அதற்கருகிலுள்ள இடங்களிலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன் பொது மறைபோதகத்தைக் கேட்பதற்குக் கூடியிருந்த ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட திருப்பயணிகளுக்கு ஏற்றதாக அமைந்திருந்தது. இப்புதன் மறைபோதகத்தில், விசுவாச அறிக்கையில் நாம் அறிக்கையிடும் அப்போஸ்தலிக்கத் திருஅவையை விசுவசிக்கின்றேன் என்பது பற்றி விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவை திருத்தூதர்கள்மீது கட்டப்பட்டது என்பதை வைத்துப் பேசினார்.
RealAudioMP3 அன்புச் சகோதர சகோதரிகளே, அப்போஸ்தலிக்கத் திருஅவையை விசுவசிக்கின்றேன் என்று விசுவாச அறிக்கையில் நாம் அறிக்கையிடுகிறோம். இதனை நாம் மூன்று வழிகளில் புரிந்து கொள்ளலாம். திருஅவை அப்போஸ்தலிக்கத் தன்மை கொண்டது. இதற்கு முதற்காரணம், இயேசு தமது திருஅவையை திருத்தூதர்களை வைத்து நிறுவி, அவர்களைத் தேர்ந்தெடுத்து தமது பணியைத் தொடர்ந்து செய்வதற்கு அவர்களை அனுப்பினார். இதனால் புனித பவுல் அடிகளாரும், திருஅவையை ஆலயத்தோடு ஒப்பிட்டுப் பேசுகிறார். இந்த ஆலயம் திருத்தூதர்களை அடித்தளமாகவும், கிறிஸ்துவை அதன் மூலைக்கல்லாகவும் கொண்டிருக்கின்றது(எபேசி.2:19-20) என்று அவர் மேலும் சொல்கிறார். மேலும், திருஅவை அப்போஸ்தலிக்கத் தன்மை கொண்டது. ஏனெனில் இது கிறிஸ்துவின் போதனைகளைக் காத்து அதை முழுமையாக வழங்கி வருகிறது. அத்துடன், கிறிஸ்து நிறுவிய மீட்பின் கருவியாகவும் இருந்து வருகிறது. திருஅவை அப்போஸ்தலிக்கத் தன்மை கொண்டது என்பதற்கு கடைசிக் காரணம் என்னவெனில், கிறிஸ்து தம் திருத்தூதர்களிடம் கொடுத்த மறைப்பணியை வரலாற்றில் நிறைவேற்றி வருகிறது. இயேசு தம் திருத்தூதர்களிடம், நீங்கள் போய் எல்லா நாடுகளின் மக்களையும் சீடராக்குங்கள். அவர்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவற்றையும் அவர்களும் கடைப்பிடிக்குமாறு கற்பியுங்கள்(மத்.28:19-20)என்று சொன்னார். நம்மை தமது மறைபோதகர்களாக அனுப்பிய உயிர்த்த கிறிஸ்துவை சந்திக்கும் இடமாக திருஅவையை நாம் போற்றி அன்புகூருவோம். நாம் சந்திக்கும் அனைவரும் நற்செய்தியின் உண்மையையும், விசுவாசத்தின் மகிழ்வையும், திருத்தூதர்களால் அறிவிக்கப்பட்ட முடிவற்ற வாழ்வின் வாக்குறுதியையும் அறியவும் அனைவரையும் அழைக்கும் இடமாக, திருஅவையை நாம் ஏற்போம்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆங்கிலத்திலான மறைபோதகம் இவ்வாறு இருந்தது. இப்புதன் மறைபோதகத்தைக் கேட்கவந்திருந்த சீனா, ஜப்பான், கொரியா, இஸ்ரேல், ஆஸ்திரேலியா, கென்யா உள்ளிட்ட பல நாடுகளின் திருப்பயணிகளை வாழ்த்தி அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.