2013-10-16 15:59:59

'குப்பை' இல்லாத தேர்தல் பிரச்சாரம்: 'இமேஜ் இந்தியா' நிறுவனத்தின் வேண்டுகோள்


அக்.16,2013. இந்தியாவில் வரவிருக்கும் தேர்தலையொட்டி, கூட்டங்கள் துவங்கியுள்ள வேளையில், பிரச்சாரம், பேரணிகளுக்கு மக்கள் கூட்டத்தை கருத்தில் கொள்ளும் அரசியல் தலைவர்கள் சுற்றுப்புறச் சூழல் குறித்து கவலை கொள்வதாக தெரியவில்லை என்பதை, 'இமேஜ் இந்தியா' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வலியுறுத்தி வருகிறது.
ஒரு பெரிய திடலில், இலட்சக்கணக்கானோர் கலந்து கொள்ளும் தேர்தல் பிரச்சாரமோ, பேரணியோ முடிந்த பிறகு, அங்கு நிறைந்திருப்பது அக்கூட்டம் விட்டுச்சென்ற குப்பை குவியல்களாகவே இருக்கும் என்று கூறும் 'இமேஜ் இந்தியா' நிறுவனம், குப்பைகள் இல்லாமல் தேர்தல் பிரசாரம் நடந்தால் எப்படி இருக்கும்? என்ற கேள்வியை எழுப்பி வருகிறது.
இந்தியாவில் போதிய அளவில் கழிப்பிடங்கள் அமைக்கப்பட வேண்டும், நலமானச் சுற்றுச்சூழல், தூய்மையான நதிகள் ஆகியவற்றை அமைக்க அரசியல் தலைவர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் ஆகியன இந்நிறுவனத்தின் கோரிக்கைகளாக இருக்கின்றன.
சுற்றுப்புறத் தூய்மையைக் கடைபிடிப்பதையும், தேர்தல் அறிக்கையில் ஒரு கொள்கையாக அரசியல் கட்சிகள் பட்டியிலிட வேண்டும் என்றும், தேர்தல் பிரச்சாரங்களின் போது சுற்றுப்புறத் தூய்மைக்கு முன்னுரிமை அளித்து, தொண்டர்களுக்கும் இதனை வலியுறுத்த வேண்டும் எனவும் 'இமேஜ் இந்தியா' நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆதாரம் : The Hindu








All the contents on this site are copyrighted ©.