2013-10-16 15:48:38

'உலக உணவு நாள்' மனித சமுதாயத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கடினமான ஒரு சவால் - திருத்தந்தை


அக்.16,2013. 'உலக உணவு நாள்' மனித சமுதாயத்திற்கு கடினமான ஒரு சவாலை விடுக்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
அக்டோபர் 16, இப்புதனன்று உலகெங்கும் சிறப்பிக்கப்படும் உலக உணவு நாளையொட்டி, உரோம் நகரில் அமைந்துள்ள ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் நிறுவனமான FAOவின் தலைமை இயக்குனர் José Graziano da Silva அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.
உலகம் பல்வேறு துறைகளில் வியப்பிற்குரிய முன்னேற்றங்களைக் கண்டுவரும் இக்காலத்தில், இன்னும் கோடிக்கணக்கான மக்கள் உணவின்றி வாடுவது, இச்சவாலை நம்மனங்களில் இன்னும் ஆழமாகப் பதிக்கிறது என்று திருத்தந்தை கூறினார்.
உலக உணவு நாளுக்கென இவ்வாண்டு FAO தெரிவு செய்துள்ள "உணவு பாதுகாப்பு, சத்துணவு, தகுதியான உணவு முறைகள்" (Sustainable Food Systems for Food Security and Nutrition) என்ற மையக்கருத்து மிகவும் பொருத்தமானது என்று திருத்தந்தை தன் செய்தியில் பாராட்டியுள்ளார்.
இவ்வாண்டின் மையக்கருத்து, நாம் இயற்கைச் செல்வங்களை எவ்வளவு தூரம் உறுஞ்சி, வீணாக்குகிறோம் என்பதை ஆழமாகச் சிந்திக்க விடுக்கப்பட்டுள்ள ஓர் அழைப்பு என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
வறியோரின் பசியைத் தீர்ப்பதற்கு, அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டும் தீர்வுகளைக் காணமுடியாது, மாறாக, ஆன்மீக, நன்னெறி வழிகள் மூலமே நிரந்தரத் தீர்வுகளைக் காணவேண்டும் என்று திருத்தந்தை தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
இன்று சிறப்பிக்கப்படும் உலக உணவு நாள் வெறும் சடங்காக மாறாமல், உணவுப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நமக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு வாய்ப்பாக நாம் கருதவேண்டும் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பிரச்சனையைத் தீர்க்கும் அனைத்து முயற்சிகளிலும் கத்தோலிக்கத் திருஅவை முழு ஈடுபாடு கொள்ளும் என்ற உறுதியையும் வழங்கியுள்ளார்.
இப்புதன் காலை, உரோம் நகில் FAO நிறுவனத்தின் மைய அரங்கத்தில் நடைபெற்ற நிகழவில், திருத்தந்தையின் செய்தியை, திருப்பீட உயர் அதிகாரி, ஆயர் Luigi Travaglino அவர்கள் வாசித்தார்.
1945ம் ஆண்டு, அக்டோபர் 16ம் தேதி, உலக உணவு வேளாண் நிறுவனமான FAO அமைக்கப்பட்டதன் நினைவாக, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 16ம் தேதி, உலக உணவு நாள் சிறப்பிக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.