2013-10-16 15:25:21

அன்னைமரியா திருத்தலங்கள் – அகித்தா அன்னைமரியா, ஜப்பான்


அக்.16,2013. அகித்தா(Akita) என்ற நகரம், ஜப்பானின் தீவுகளில் பெரியதாகிய Honshisu தீவின் Tōhoku மாநிலத்தின் தலைநகரமாகும். 1889ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியன்று இந்த நவீன நகரம் அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டது. இந்நகரம், மத்திய காலத்திலிருந்து Tōhoku மாநிலத்தின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. Ashina, Satake daimyo ஆகிய இருவரும் தற்போதைய அகிதா நகரத்தை உருவாக்கினர். இந்தப் புகழ்மிக்க அகிதா நகரில் அன்னைமரியா காதுகேளாத ஒரு நவதுறவி மூலம் இந்த மானிட சமுதாயத்தின் மீது தான் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த அகித்தா நகருக்குப் புறநகர்ப் பகுதியிலுள்ள Yuzawadai என்ற இடத்தில், திருநற்கருணையின் அடிமைகள் என்ற அடைபட்ட துறவு சபையினரின் இல்லம் உள்ளது. இங்கு 1973ம் ஆண்டு மே மாதம் 12ம் தேதி, 42 வயதான ஆக்னெஸ் கட்சுகோ சாசாகாவா(Agnes Katsuko Sasagawa) என்பவர், நவதுறவியாகச் சேர்ந்தார். புத்தமதத்திலிருந்து மனமாறிய ஆக்னெஸ் இச்சபையில் சேர்ந்தபோது காது கேளாதவராய், அதுவும் குணமாக்கமுடியாத அளவுக்கு காது கேளாதவராய் இருந்தார். ஆயினும் ஆக்னெஸ் பல்வேறு அனுபூதி அனுபவங்களால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தார். இதனால் இந்த திருநற்கருணையின் அடிமைகள் துறவு சபை பிரபலமானது. அவ்வில்லத்திலுள்ள சிற்றாலயமும் உலகின் பல பகுதியிலிருந்து திருப்பயணிகள் வந்து செபிக்கும் இடமாக மாறியது.
அருள்சகோதரி ஆக்னெஸ் சபையில் சேர்ந்த ஒரு மாதம் கழித்து, அதாவது 1973ம் ஆண்டு ஜூன் மாதம் 12ம் தேதியன்று திருநற்கருணைப் பேழையிலிருந்து ஒரு பிரகாசமான ஒளியைப் பார்த்தார். இவ்வாறு பல தடவைகள் பார்த்தார். அச்சமயங்களில் பலிபீடத்தைச் சுற்றி புகை மண்டலம் சூழ்ந்திருந்ததைப் பார்த்தார் ஆக்னெஸ். இத்தகைய ஒரு காட்சியின்போது வானதூதர்கள் பெருமெண்ணிக்கையில் பீடத்தைச் சூழ்ந்திருந்து திருநற்கருணை முன் ஆராதனை செய்வதைக் கண்டார். அச்சமயத்தில் அந்தக் கன்னியர் இல்லத்தில் ஒரு வாரம் செபத்துக்காகத் தங்கியிருந்த ஆயர் Ito, அச்சகோதரிகளின் ஆன்மீக அருள்பணியாளர் Teiji Yasuda ஆகிய இருவரும் ஆக்னெசின் பல காட்சிகளுக்குச் சாட்சியாக உள்ளனர்.
சகோதரி ஆக்னெஸ், அவருடைய காவல்தூதரையும் பார்த்திருக்கிறார். இத்தூதர் ஆக்னெசுக்குப் பல செய்திகளைச் சொல்லி அவரோடு சேர்ந்து செபித்து ஆலோசனைகளையும் சொல்லியிருக்கிறார். 1973ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி ஆக்னெஸ் தனது இடது உள்ளங்கையில் சிலுவை வடிவ காயத்தைப் பெற்றார். அக்காயம் மிகவும் வலியாக இருந்தது. பின்னர் ஜூலை 5ம் தேதி அக்காயத்தின் நடுவிலிருந்து இரத்தம் வரத் தொடங்கியது. பின்னாள்களில் இக்காயம் வியாழன் இரவுகளிலும், வெள்ளிக்கிழமை முழுவதும் இருந்தது. அது சொல்லமுடியாத அளவுக்கு வலியையும் கொடுத்துள்ளது. ஜூலை 6ம் தேதி ஆக்னெசின் காவல்தூதர் அவரிடம், அன்னைமரியாவின் மனக்காயங்கள் உன்னுடைய காயத்தைவிட மிகவும் ஆழமானவை மற்றும் மிகுந்த வேதனை தந்தவை என்று சொல்லி, வா, சிற்றாலயத்துக்குச் சென்று செபிப்போம் என்று ஆக்னெசை சிற்றாலயத்துக்கு அழைத்துச் சென்றார். ஆனால் ஆலயத்துக்குள் நுழைந்தவுடன் காவல்தூதர் மறைந்துவிட்டார்.
அந்த ஆலயத்தில் பீடத்தின் வலது பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னைமரியா திருவுருவத்தின் முன்பாகச் செபித்தார் ஆக்னெஸ். மூன்று அடி உயரமுடைய இந்த அன்னைமரியா திருவுருவம் சாதாரண கஸ்தூரா மரத்தாலானது. சிலுவையின் முன்புறம் நிற்கும் இவ்வன்னைமரியா விரித்த கரங்களுடன் உலக உருண்டை மீது நின்று கொண்டிருப்பதுபோல் இருக்கும். ஆக்னெஸ் இந்தத் அன்னைமரியா திருவுருவத்தை நெருங்கியபோது அவ்வுருவம் உயிருள்ளதாய் மாறி பேசத் தொடங்கியது. அச்சமயத்தில் அன்னைமரியா கண்கள்கூசும் அளவுக்கு ஒளியால் சூழ்திருந்தார். அதேநேரம் வார்த்தையால் விவரிக்க முடியாத அழகுநிறைந்த குரல் ஆக்னெசின் கேட்கத்திறனற்ற காதுகளைத் தொட்டது. அப்போது அன்னைமரியா ஆக்னெசிடம், "உனது காதுகேளாமை குணமாகிவிட்டது" என்று சொன்னார். பின்னர், ஆயர் Ito அவர்கள், அந்த அருள்சகோதரிகள் குழுவினருக்கென எழுதிய செபம் ஒன்றை, அன்னைமரியா ஆக்னெசுடன் சேர்ந்து சொன்னார். மேலும் அன்னைமரியா ஆக்னெசிடம், இயேசு திருநற்கருணையில் பிரசன்னமாய் இருக்கிறார். இப்பொழுதிலிருந்து நீ “உண்மையாகவே” என்ற சொல்லையும் சேர்த்து அச்செபத்தை சொல்ல வேண்டும் என்று சொன்னார். முதலில் மறைந்து போன காவல்தூதர் மீண்டும் தோன்ற, இவர்கள் மூவரும் சேர்ந்து, இயேசு திருநற்கருணையில் உண்மையாகவே பிரசன்னமாய் இருக்கிறார் என்று சொல்லி இயேசுவின் திருஇதயத்துக்கு ஒப்புக்கொடுக்கும் செபத்தைச் சொன்னார்கள். அக்காட்சியில் அன்னைமரியா மறைந்து போகுமுன்னர் ஆக்னெசிடம், திருத்தந்தைக்காகவும், ஆயர்கள் மற்றும் குருக்களுக்காகவும் அதிகம் செபிக்குமாறு சொன்னார்.
இதற்கு அடுத்த நாள் காலையில் இவ்வில்லச் சகோதரிகள் அனைவரும் சேர்ந்து திருப்புகழ்மாலை செபிக்கத் தொடங்கியபோது அன்னைமரியா திருவுருவத்தின் வலது கையிலிருந்து இரத்தம் சிந்துவதைப் பார்த்தனர். இப்படி நான்கு தருணங்களில் நடந்துள்ளது. வெள்ளிக்கிழமைகளில் சகோதரி ஆக்னெசின் கரத்திலிருந்த காயத்திலிருந்து இரத்தம் வடிந்தபோதெல்லாம் இந்த அன்னைமரியா திருவுருவக் காயத்திலிருந்தும் இரத்தம் வடிந்தது. இந்தக் காயம் செப்டம்பர் 29ம் தேதிவரை இருந்துள்ளது. அதன்பின்னர் அத்திருவுருவத்தின் நெற்றியிலும் கழுத்திலும் வியர்க்கத் தொடங்கியுள்ளது. 1973ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதியும், அக்டோபர் 13ம் தேதியும் சகோதரி ஆக்னெஸ் அன்னைமரியாவிடமிருந்து செய்திகளைப் பெற்றார். 1975ம் ஆண்டு சனவரி 4ம் தேதியன்று இந்த அன்னைமரியா திருவுருவம் கண்ணீர் வடிக்கத் தொடங்கியது. இது அடுத்த ஆறு ஆண்டுகள், எட்டு மாதங்கள் வரை விட்டுவிட்டு நீடித்தது. மொத்தத்தில் 101 தடவைகள் கண்ணீர் வடித்துள்ளது அத்திருவுருவம்.
1981ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதியன்று சகோதரி ஆக்னெஸ் திருநற்கருணை ஆராதனை செய்துகொண்டிருந்தபோது திடீரென வானதூதர் அவரருகில் இருப்பதை உணர்ந்தார். ஆனால் அத்தூதரை அவர் பார்க்கவில்லை. எனினும் ஆக்னெசின் கண்முன்பாக ஒரு விரிக்கப்பட்ட விவிலியத்தைப் பார்த்தார். அதை வாசிக்க வேண்டுமென்றும் ஆக்னெசுக்குக் கூறப்பட்டது. அவர் பார்த்தது தொடக்க நூல் 3ம் அதிகாரம் 15ம் திருச்சொற்றொடர் ஆகும். அந்தப் பகுதிக்கும், அன்னைமரியா திருவுருவம் கண்ணீர் வடிப்பதற்கும் தொடர்பு இருப்பதாக வானதூதர் சொல்வதைக் கேட்டார் ஆக்னெஸ். பாவம், ஒரு பெண்ணால் இவ்வுலகுக்கு வந்தது. உலகத்துக்கு மீட்பும் ஒரு பெண்ணால் கிடைத்தது. முதல் பெண் ஏவாள். இரண்டாவது பெண் அன்னைமரியா என்பதே அப்பகுதியில் சொல்லப்பட்டுள்ளது.
கர்தினால் ஜோசப் இராட்சிங்கர் திருப்பீட விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத் தலைவராக இருந்தபோது, 1988ம் ஆண்டு ஜூன் மாதத்தில், அகிதா அன்னைமரியா காட்சிகளும், அதில் வெளிப்படுத்தப்பட்ட செய்திகளும் உண்மையென அறிவித்தார். இம்மாதம் 12, 13 தேதிகளில் பாத்திமா அன்னைமரி திருவுருவம் வத்திக்கான் வந்தபோது, உரோம் திவினோ அன்னைமரி திருத்தலத்தில் நடந்த செபமாலை திருவழிபாட்டில் விண்கோள் மூலம் அகிதா அன்னைமரியா திருத்தலமும் இணைக்கப்பட்டது.
1973ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி அகிதா அன்னைமரியா சகோதரி ஆக்னெசிடம், மகளே, நான் சொல்வதைக் கவனமாய்க் கேட்டு உனது இல்லத் தலைவரிடம் சொல். மனிதர்கள் மனம்வருந்தி தங்களை மாற்றிக்கொள்ளாவிட்டால் வானகத்தந்தை அனைத்து மனித சமுதாயத்துக்கும் பயங்கரமான தண்டனையைக் கொடுப்பார். இத்தண்டனை இதுவரை நடக்காததுபோன்று இருக்கும். வானத்திலிருந்து நெருப்பு வந்து பெருமளவான மனித சமுதாயத்தை அழித்துவிடும். இதில் நல்லவர்களும் தீயவர்களும் சேர்ந்து அழிவர். உன்னைக் காக்கும் ஒரே ஆயுதம் செபமாலை. அதனால் தினமும் செபமாலை செபித்து திருத்தந்தை, ஆயர்கள் மற்றும் குருக்களுக்காகச் செபி என்று சொன்னார். நாமும் தினமும் செபமாலை செபிப்போம்.







All the contents on this site are copyrighted ©.