2013-10-15 16:15:45

இன்றும் கிறிஸ்தவர்கள் மத்தியில் வெளிவேடக்காரரும், தற்புகழ்ச்சியாளரும் உள்ளனர், திருத்தந்தை பிரான்சிஸ்


அக்.15,2013. தாங்கள் நினைப்பதே சரியானது, தங்களின் எண்ணங்கள் எல்லா வல்லமையும் கொண்டவை எனக் கருதும் தங்களையேப் போற்றுகிறவர்களும், பகட்டான, வீணான, தனது முன்னேற்றத்தில் ஆர்வமுடைய வெளிவேடக்காரர்களும் இன்றும் கிறிஸ்தவர்கள் மத்தியில் உள்ளனர் என்று இச்செவ்வாயன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவையெல்லாம் கீழ்த்தரமானவை என்றும், இவற்றை விலக்கி நடப்பதற்கு கடவுளன்பு மற்றும் பிறரன்பு கட்டளையை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இச்செவ்வாய் காலை, புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பறப்பன, நடப்பன, ஊர்வன, ஆகியவற்றைப் போல உள்ள உருவங்களை வழிபட்ட மக்களுக்கு எதிராக புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடலில் கூறியதை (உரோ.1:16-25) வைத்து மறையுரை வழங்கிய திருத்தந்தை, சிலைவழிபாட்டுப் பாவம் பற்றிப் பேசினார்.
கடவுளை அறிவதையும், அவரை மகிமைப்படுத்துவதையும், அவருக்கு நன்றி கூறுவதையும் விட்டு படைப்புக்களை வணங்கும் மக்கள் பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, இந்தப் போக்கு, உண்மையான விசுவாசத்தை ஒதுக்கும் சிலைவழிபாட்டுத்தன்மை என்று கூறினார்.
இன்று நாம் சிலைகளை வணங்காவிட்டாலும், வேறுவிதமான சிலைவழிபாடுகள் நம் மத்தியில் இருக்கின்றன என்றும், என்னுள் மறைந்திருக்கும் சிலை என்ன?, நம் ஆண்டவரின் இடத்தை எடுத்துக்கொள்வது எது? என்று நாம் ஒவ்வொருவரும் கடவுள் முன்பாக கேட்போம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளை அன்பு செய்வதும், அவரை வழிபடுவதும் என்பது நமது அயலாரை அன்பு செய்வதாகும், இது எளிதானது, ஆனால் கடினமானது, இதனை இறையருளின் உதவியினால் மட்டுமே செய்ய முடியும், இந்த வரத்தை நாம் கேட்போம் என்று மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.