2013-10-14 16:21:55

வரும் ஆண்டு நடைபெறும் ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர், செயலர் - திருத்தந்தையால் நியமனம்


அக்.14,2013. 2014ம் ஆண்டு, அக்டோபர் 5ம் தேதி முதல் 19ம் தேதி முடிய வத்திக்கானில் நடைபெறவிருக்கும் ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரையும், மன்றத்தின் செயலரையும் இத்திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமனம் செய்துள்ளார்.
ஹங்கேரி நாட்டின் Esztergom-Budapest உயர் மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் Péter Erdő அவர்களை, தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், Chieti-Vasto உயர்மறைமாவட்டத்தின் பேராயர் Bruno Forte அவர்களை, செயலராகவும் திருத்தந்தை நியமித்துள்ளார்.
"நற்செய்தி அறிவிப்புச் சூழலில், குடும்பம் சந்திக்கும் சவால்கள்" என்ற மையக்கருத்துடன், ஆயர்களின் சிறப்பு மாமன்றம் நடைபெறவுள்ளது.
இதற்கிடையே, "இளையோரே, உங்கள் வாழ்வில் திட்டவட்டமான முடிவுகளை எடுக்க அஞ்சாதீர்கள். நம்பிக்கை கொள்ளுங்கள்; இறைவன் உங்களைக் கைவிடமாட்டார்" என்ற அழைப்பை தன் Twitter செய்தியாக இத்திங்கள் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.
மேலும், "கருணை காட்டுவதில் உருவாகும் சலிப்பினால், புலம்பெயர்ந்தோரை வரவேற்பதில் நாடுகள் ஆர்வம் குன்றக்கூடாது" என்ற Twitter செய்தியை, பேராயர் சில்வானோ தொமாசி அவர்களின் பெயரால் திருப்பீடம் இத்திங்கள் வெளியிட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.