2013-10-14 16:19:52

நாம் ஆற்றும் செயல்களே நம்மை மீட்கும் என்ற கருத்து, 'யோனாவின் குறைபாடு' - திருத்தந்தை பிரான்சிஸ்


அக்.14,2013. வறியோர் மீது பரிவுகாட்டும் மனதை வளர்ப்பதைப் புறந்தள்ளிவிட்டு, தலைசிறந்த பக்தியில் வளர்வதற்கு முயற்சி செய்வது ஆபத்தானது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எச்சரிக்கை விடுத்தார்.
இத்திங்கள் காலை, புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலியாற்றியத் திருத்தந்தை, 'யோனாவின் அடையாளம்' குறித்து இயேசு விடுத்த எச்சரிக்கையை மையப்படுத்தி (லூக்கா நற்செய்தி 11: 29-32) தன் மறையுரையை வழங்கினார்.
'தீயத் தலைமுறையினர்' என்று இயேசு பயன்படுத்தும் கடினமான சொற்கள், எளிய மக்களை மனதில் வைத்து சொல்லப்பட்டவை அல்ல, மாறாக, இயேசுவிடம் அடையாளம் காட்டுமாறு கேட்ட மறைநூல் அறிஞர்களை மனதில் வைத்து சொல்லப்பட்ட வார்த்தைகள் என்று திருத்தந்தை தெளிவுபடுத்தினார்.
நாம் ஆற்றும் செயல்களே நம்மை மீட்கும் என்ற கருத்தை, 'யோனாவின் குறைபாடு' (Syndrome of Jonah) என்று குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, இத்தகைய மன நிலையினின்று விடுதலைபெற்று, இறைவன் தரும் ஏனைய அடையாளங்களைப் பின்பற்றுவதே நம்மை மீட்கும் என்று தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.