2013-10-12 18:05:07

பொதுக்காலம் - 28ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 பத்துத் தொழுநோயாளர்களை இயேசு குணமாக்கும் நிகழ்வு இன்றைய நற்செய்தியாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நற்செய்தி மூன்று பாடங்களை நமக்குச் சொல்லித் தருகின்றன.
முதல் பாடம் - தொழுநோயாளர்களுக்கு நாம் தரவேண்டிய மதிப்பு
2வது பாடம் – சமுதாய வேறுபாடுகளைப் போக்கும் சிறந்த மருந்து துன்பம்
3வது பாடம் - வாழ்நாளெல்லாம் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய நன்றி உணர்வு

இயேசு தொழுநோயாளர்களைக் குணமாக்கும் நிகழ்வுகள் லூக்கா நற்செய்தியில் இருமுறை பதிவாகியுள்ளன (லூக்கா 5: 12-14; 17: 11-19). தன் பணிவாழ்வின் துவக்கத்திலும், இறுதியிலும் இயேசு ஆற்றிய புதுமைகள் இவை. இவ்விரு நற்செய்திப் பகுதிகளிலும், தொழுநோயாளர்கள் அவர், இவர் என்று மரியாதையுடன் குறிப்பிடப்பட்டுள்ளனர். அவன், இவன் என்றல்ல. முன்பு நாம் பயன்படுத்திய விவிலிய மொழிபெயர்ப்பில் அவன், இவன் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தொழுநோயாளரை ஒரு மனிதராக எண்ணி, அவருக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டிருக்கிறது. இது நாம் அண்மையில் பின்பற்றும் ஓர் அழகான பழக்கம். வார்த்தைகளை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதிலிருந்தே பல வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

இயேசு ஆற்றிய இப்புதுமையைப்பற்றி சிந்திப்பதற்கு முன்னால், தொழுநோயாளர் என்ற வார்த்தையைப்பற்றி சிறிது சிந்திப்போம். தொழுநோய் உள்ளவர்களை, பழையத்தமிழில், ‘குஷ்டரோகி’ என்று சொல்வோம். ஆங்கிலத்திலும் அவர்களை leper என்று சொல்வோம். நல்லவேளையாக, தற்போது, தமிழிலும், ஆங்கிலத்திலும் தொழுநோயாளர், leprosy patient என்ற சரியான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம்.
குஷ்டரோகி என்றோ, leper என்றோ சொன்னபோது, மனிதர்கள் என்ற நிலையை இழந்து, ஏதோ அந்த நோயாகவே அவர்கள் மாறிவிட்டனர் என்ற கண்ணோட்டம் மனதில் பதிந்தது. இந்த நோய் உடையவர்கள் மனிதப் பிறவியிலிருந்து பல படிகள் தாழ்ந்த நிலையில் உள்ள ஒரு பிறவியாக நினைத்தோம், அவர்களை அப்படியே நடத்தினோம். சாதிய மடமையில் வாழும் சமுதாயங்களில், ஒரு சில குலங்களில், குடும்பங்களில், இடங்களில் பிறந்தவர்களை, ஏதோ பிறவியிலேயே அவர்கள் குறையுடன் பிறந்தவர்கள் போலவும், எனவே, அவர்களைப் பார்க்கும்விதம், அவர்களோடு பழகும்விதம் இவைகளில் வேறுபாடுகள் காட்டுவது, அச்சமுதாயங்கள் வளர்த்துக்கொண்ட சாபக்கேடு.
குஷ்டரோகி என்பதற்கும், தொழுநோயாளர் என்பதற்கும் எத்தனையோ வேறுபாடுகள். வெறும் வார்த்தைகளில் காணப்படும் வேறுபாடுகள் அல்ல, மாறாக, சிந்தனையிலேயே இவை இரண்டிற்கும் வேறுபாடுகள் உள்ளன. ‘வேலைக்காரி’ அல்லது ‘வேலைக்காரன்’ என்ற வார்த்தைகளுக்கும், ‘பணியாளர்’ என்ற வார்த்தைக்கும் வேறுபாடுகள் உள்ளன. ‘முடவன்’ என்ற வார்த்தைக்கும் ‘மாற்றுத் திறனாளி’ என்ற வார்த்தைக்கும் வேறுபாடுகள் உள்ளன. வார்த்தைகளில் மதிப்பு ஒலிக்கும்போது, மனதிலும் மதிப்பு உருவாகும் என்று நம்புகிறோம்.
வார்த்தைகள் என்ன அவ்வளவு முக்கியமா என்று நம்மில் சிலர் நினைக்கலாம். ஆம், உள்ளத்தின் நிறைவிலிருந்துதான் வாய் பேசும் என்றும், தீயைவிட அதிக சூடானது வார்த்தைகள் என்றும் நாம் சொல்லக் கேட்டிருக்கிறோம், உணர்ந்தும் இருக்கிறோம். நோயுற்றோரை, பணியாளரை, மாற்றுத் திறனாளிகளை மதிப்புடன் நடத்துவதற்கு, முதலில் நாம் அவர்களைக் குறிப்பிடும் வார்த்தைகளிலிருந்து பாடங்களைத் துவக்க வேண்டும். இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்லித்தரும் முதல் பாடம் இது.

இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகளில் நாம் கற்றுக்கொள்ளக் கூடிய 2வது பாடம் சொல்லப்பட்டுள்ளது. இதோ இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகள்:
லூக்கா நற்செய்தி, 17:11-19
இயேசு எருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார். ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்று கொண்டே, “ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும் என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்.
இயேசு ‘கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார் என்ற கூற்றுடன் இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. யூதர்களும், சமாரியர்களும் வாழ்ந்தப் பகுதிகள் அவை. இன்றைய நமது கலாச்சாரப் பின்னணியில் இதைச் சிந்தித்தால், அக்ரகாரத்தின் வழியாகவும், சேரியின் வழியாகவும் இயேசு நடந்தார் என்று சிந்திக்கலாம். தேவையற்ற பாகுபாடுகளுடன் வாழும் யூதர்களையும், சமாரியர்களையும் ஒன்று சேர்க்கமாட்டோமா என்ற ஏக்கம் நிறைந்த சிந்தனைகளுடன் இயேசு அவ்வழியே சென்றிருக்கவேண்டும்.
அந்நேரம், பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிராக வந்தனர். அவர்கள் யூதரா? சமாரியரா? தெரியவில்லை. அவர்கள் அனைவரும் தொழுநோயாளர்கள். தொழுநோய் என்ற ஒரே காரணத்தால், யூத சமூகமும், சமாரிய சமூகமும் அவர்களைப் புறக்கணித்தன. அந்த புறக்கணிப்பு அவர்களை இணைத்தது. இதுவே ஒரு புதுமைதானே!

நோய், நொடி, துன்பம், பேரழிவு என்று வரும்போது மனித சமுதாயம் பலவகைகளில் இணைந்து விடுகிறது. 1977ம் ஆண்டு, திருச்சி தூய வளனார் கல்லூரியில் நான் பயின்றுகொண்டிருந்தபோது, பெருவெள்ளம் ஒன்று திருச்சியைச் சூழ்ந்தது. கல்லூரியும் பாதிக்கப்பட்டது. கல்லூரியைச் சுற்றியிருந்த வீடுகள் இன்னும் மோசமாகப் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்டப் பகுதிகளில், சேரிகளும் உண்டு, அக்ரகாரங்களும் உண்டு. பாதிக்கப்பட்டவர்களில் நூற்றுக்கணக்கானோர் கல்லூரிக் கட்டடத்தின் 2வது 3வது மாடிகளில் தஞ்சம் புகுந்தனர். சாதி, மதம், இனம், ஏழை, செல்வர் என்ற பாகுபாடுகள் எல்லாம் அழிக்கப்பட்டு, எல்லாரும் சேர்ந்து தங்கினர். அரசு சார்பில் அளிக்கப்பட்ட உணவு பொட்டலங்களை எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டனர். அவர்கள் வீட்டுச் சுவர்கள் வெள்ளத்தில் இடிந்தபோது, காலம் காலமாய் அவர்கள் கட்டிவைத்த பிரிவுச்சுவர்களும் இடிந்தன. ஆனால், வெள்ளம் வடிந்து, அவர்கள் மீண்டும் அவரவர் வீட்டுச் சுவர்களை எழுப்பியபோது, இந்த பிரிவுச்சுவர்களும் கட்டப்பட்டுவிட்டன என்று நினைக்கிறேன்.
2001ம் ஆண்டு, சனவரி 26, இந்தியக் குடியரசு நாளன்று, குஜராத் மாநிலத்தில் Bhuj என்ற இடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, இந்து முஸ்லிம் என்ற வேறுபாடுகள் ஏதுமின்றி மனிதர்கள் ஒருவருக்கொருவர் இரத்ததானம் செய்தனர். ஆனால், அதே குஜராத்தில், அடுத்த ஆண்டு, 2002, பிப்ரவரியில் உருவான கலவரங்களில் ஒருவர் ஒருவரின் இரத்தத்தை அந்த மாநிலமெங்கும் சிந்தினர்.

2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, நியூயார்க்கில், இரு பெரும் வர்த்தகத் கோபுரங்கள் விமானங்கள் கொண்டு தாக்கப்பட்டதால், இடிந்து விழுந்த நிகழ்வு அனைவருக்கும் நினைவிருக்கும். அந்த அழிவு அனைவரையும் சமமாக்கியது. இதைப்பற்றி ஒருவர் மின்னஞ்சலில் எழுதியது, எனக்கு நினைவுக்கு வருகிறது.
As the soot and dirt and ash rained down,
We became one color.
As we carried each other down the stairs of the burning building,
We became one class.
இடிந்து விழுந்தன கோபுரங்கள், நிமிர்ந்து நின்றது மனித குலம். அந்த இடிபாடுகள் எழுப்பிய, புகையும், புழுதி மண்டலமும் சூழ இருந்த மக்கள் அனைவரையும் ஒரே நிறமாக்கியது. வெள்ளையர், கறுப்பர் என்ற பாகுபாடுகள் இல்லாமல் போயின.
பல நூறு ஆண்டுகள் அமெரிக்க மக்கள் கண்டு வரும் சமத்துவம் என்ற கனவு அந்த அழிவு நேரத்தில், நனவாகியது. ஆனால், பாவம், அந்த அழிவிலிருந்து மீண்டதும், பழைய பாகுபாடுகள் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டன.

தொழுநோய் என்ற துன்பம், பாகுபாடுகளை மறந்து, இந்த பத்து நோயாளிகளை சேர்த்து வைத்தது. ஆனால், தொழுநோய் நீங்கியதும் என்ன நடந்திருக்கும் என்பதை இப்படி நினைத்துப் பார்க்கிறேன். "அவர்கள் புறப்பட்டு போகும்போது, அவர்கள் நோய் நீங்கிற்று" என்று நற்செய்தி கூறுகிறது. நோய் நீங்கியதை உணர்ந்த ஒருவர் உரத்தக் குரலில் கடவுளைப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார். அவர் ஒரு சமாரியர்.
"மற்ற ஒன்பது பேரும் எங்கே?" என்று இயேசு தேடுகிறார். இந்தக் கேள்வியில் ஒலிக்கும் இயேசுவின் ஏக்கம் புரிகிறது. அவர்கள் அனைவரும் தன்னிடம் திரும்பிவந்து நன்றி சொல்லவேண்டும் என்ற ஏக்கம் அல்ல. நோயுற்றிருந்தபோது அவர்களிடம் அவர் கண்ட அந்த ஒற்றுமை எங்கே போனது என்பதை இயேசு அதிகம் தேடியிருப்பார். அந்த ஒற்றுமை எங்கே போனது? போகும் வழியில் அது போய்விட்டது.

நோயாளி என்ற ஒரே குலத்தில் இருந்த அவர்கள், நோய் நீங்கியதும் யூதர் என்றும், சமாரியர் என்றும் பிரிந்தனர். அவர்கள் மத்தியில் ஒரு சமாரியர் இருந்ததை அவர்கள் மீண்டும் உணர்ந்தனர். அந்தச் சமாரியரை மேலும், கீழும் பார்த்தனர். "நீங்கள் போய், உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்" என்று இயேசு சொன்னதை நினைத்துப் பார்த்தனர். குருக்களிடம் தாங்கள் போகும்போது, இந்தச் சமாரியனோடு போனால், மீண்டும் பிரச்சனைகள் வருமே. இது நாள் வரை அவர்களை விலக்கிவைத்த தொழுநோய் என்ற தீட்டோடு, ஒரு சமாரியனோடு அவர்கள் சேர்ந்திருந்தது மற்றொரு தீட்டாக மாறுமே.
தொழுநோயுற்றபோது தன்னுடன் துன்பத்தில் இணைந்தவர்கள் மனதில் இப்போது வேற்றுமை எண்ணங்கள் வளர்ந்திருந்ததை அவர்களின் வெப்பப் பார்வையிலேயே அந்த சமாரியர் உணர்ந்திருக்கவேண்டும். அவராகவே அவர்களை விட்டு விலகுகிறார். அனால், அவருக்குள் ஒரு சின்ன கலக்கம். தன்னை இவ்வளவு அன்போடு குணமாக்கியவர், "குருக்களிடம் காட்டுங்கள்." என்று கட்டளையிட்டாரே. என்ன செய்யலாம்? என்ற கலக்கம் அது. அவரது மனதில் ஒரு தெளிவு பிறக்கிறது. தன்னை குணமாக்கியவரே ஒரு பெரும் குரு. தெய்வம். அவரிடமே சரண் அடைவோம். இந்தத் தெளிவோடு அந்தச் சமாரியர் இயேசுவிடம் திரும்ப வருகிறார்.
திரும்பி வந்த சமாரியரைப் பார்த்து, இயேசுவுக்கு ஒருபுறம் மகிழ்வு. மறுபுறம் வேதனை. நன்றிக்கடன் செலுத்தவந்த சமாரியரைப் பார்த்து மகிழ்வு. ஆனால், அவர் மீண்டும் தனிமைபடுத்தப்பட்டது, ஒதுக்கப்பட்டது குறித்து இயேசுவுக்கு வேதனை. "மற்ற ஒன்பது பேரும் எங்கே?" என்று மனம்விட்டு, வாய்விட்டு கேட்டே விடுகிறார்.
இயேசுவின் இந்த ஏக்கம் நிறைந்த கேள்விக்கு நாம் இன்றும் பதில் சொல்லமுடியாமல் தடுமாறுகிறோம். நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளின் போதும், கலவரங்கள், போர்கள் என்று மனிதர்கள் உருவாக்கும் அழிவுகளின்போதும் ஒருங்கிணையும் நாம், இத்துன்பங்கள் விலகியதும் மீண்டும் நம் சுயநலச் சுவர்களை எழுப்பிவிடுகிறோமே இது ஏன்? இன்றைய நற்செய்தி இக்கேள்வியை 2வது பாடமாக நமக்கு முன் வைக்கிறது. நமது பதில் என்ன?

இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்லித்தரும் 3வது பாடம் - வாழ்நாளெல்லாம் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய நன்றி உணர்வைப் பற்றிய பாடம். உலகில் உள்ள மக்களை இரு குழுக்களாகப் பிரிக்கலாம். நன்றியுள்ளவர்கள், நன்றி மறந்தவர்கள். இவ்விரு குழுக்களில், ஒவ்வொரு குழுவிலும் எத்தனை பேர் இருப்பார்கள்? இன்றைய நற்செய்தியில் சொல்லப்பட்டது போல, ஒன்றுக்கு ஒன்பது என்பதுதான் அந்த கணக்கோ என்று எண்ணத் தோன்றுகிறது.
நம்முடைய சொந்த வாழ்வையும் ஆய்வுசெய்தால், அங்கும் இதே கணக்கு நிலவுகிறதா என்பதைச் சிந்தித்துப் பார்க்கலாம். நம்மில் பலருக்கு, என்னையும் சேர்த்து சொல்கிறேன்.. நன்றி உணர்வு ஒன்று எழுந்தால், அதை அழுத்தி, புதைத்துவிட ஒன்பது பிற எண்ணங்கள் எழுந்து வரும். இதனால், நாம் நன்றி சொல்லும் நேரங்களைவிட, கவலைகளையும், கோபதாபங்களையும் சொல்லும் நேரங்கள்தாம் அதிகம். நமது செபங்களைச் சிறிது ஆய்வு செய்தால், அவற்றில், பத்தில் ஒன்பது பகுதி குறைகளை வெளியிடும் விண்ணப்பச் செபங்களாகவும், பத்தில் ஒரு பகுதி மட்டுமே நிறைகளைக் கூறும் நன்றி செபங்களாகவும் இருக்கலாம்.
இறைவனுக்கும், பிறருக்கும் நன்றி சொல்லும்போது, அதுவும் உதட்டளவில் இல்லாமல், உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி சொல்லும்போது, அழகியதொரு நிறைவை நாம் கட்டாயம் உணர்ந்திருப்போம், இல்லையா?

நன்றியைப் பற்றிய இரு அழகான எண்ணங்கள் நமக்கு உதவியாக இருக்கும்… “The most important prayer in the world is just two words long: Thank you” Meister Eckhart
உலகத்திலேயே மிக முக்கியமான, அவசியமான செபம் இரண்டே வார்த்தைகளில் அடங்கும்: உமக்கு நன்றி.
இன்னொமொரு அழகான கூற்று: “God has two homes - one in heaven and the other is a thankful heart” கடவுள் வாழும் இல்லங்கள் இரண்டு. ஒன்று விண்ணகம். மற்றொன்று நன்றி நிறைந்த உள்ளம். கடவுள் விரும்பித்தங்கும் இல்லமாக நம் உள்ளங்கள் இருக்கவேண்டும் என்பது, இன்றைய நற்செய்தி நமக்குத் தரும் 3வது பாடம்.

இறுதியாக, ஓர் எண்ணம். அக்டோபர் 12,13, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், வத்திக்கானில் மரியன்னை நாள் சிறப்பிக்கப்படுகின்றது. பாத்திமா திருத்தலத்தில் வணங்கப்படும் அன்னை மரியாவின் புகழ்பெற்ற திருஉருவச்சிலை, இத்தருணத்தையொட்டி, வத்திக்கான், புனித பேதுரு பசிலிக்காவை வந்தடைந்துள்ளது.
பாத்திமா அன்னையின் பிரசன்னத்தில், இச்சனிக்கிழமை மாலை, புனித பேதுரு வளாகத்தில் கூடிவரும் பல்லாயிரம் பக்தர்களுக்கு, சிறப்புச் செபவழிபாட்டையும், ஞாயிறு காலை திருப்பலியையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முன்னின்று நடத்துகிறார்.
மனிதர்க்ள் எந்நிலையில் இருந்தாலும், அவர்களை மதிக்கும் மனதை நாம் அனைவரும் பெறவும், நம்மிடையே வளர்ந்துள்ள பிரிவுகள் மறையவும், வாழ்வில் நாம் என்றும் நன்றியுள்ளம் கொண்டு வாழவும் அன்னையின் பரிந்துரையை வேண்டுவோம்.









All the contents on this site are copyrighted ©.