2013-10-12 15:53:59

பாத்திமா அன்னைமரி திருவுருவத்தின் முன்பாக பன்னாட்டு அளவில் செபமாலை


அக்.12,2013. இச்சனிக்கிழமை மாலையில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அன்னைமரியா நாள் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களுக்குப் பின்னர், பாத்திமா அன்னைமரி திருஉருவம், உரோம் “திவினோ அமோரே-இறையன்பு” அன்னைமரியா திருத்தலத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
ஏறக்குறைய இந்திய நேரம் இரவு 10.30 மணியளவில் உரோம் திவினோ அமோரே அன்னைமரியா திருத்தலத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட பாத்திமா அன்னைமரி திருவுருவத்தின் முன்பாக துவங்கிய செபமாலை பக்திமுயற்சி, தமிழகத்தின் வேளாங்கண்ணி ஆரோக்ய அன்னை திருத்தலம் உட்பட ஐந்து கண்டங்களின் பத்து அன்னைமரியா திருத்தலங்களோடு விண்கோள் ஒளிபரப்புமூலம் இணைக்கப்பட்டது. அதன்பின்னர் திருநற்கருணை ஆராதனையும் தொடர்ந்து இரவு முழுவதும் நடந்தது.
நற்செய்திப்பணியை புதிய வழியில் அறிவிக்கும் திருப்பீட அவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மரியா நாள் கொண்டாட்டங்களின் நிறைவாக, இஞ்ஞாயிறு காலை 10.30 மணியளவில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலி நிகழ்த்தி பாத்திமா அன்னைமரியின் மாசற்ற திருஇதயத்திடம் இவ்வுலகை அர்ப்பணிப்பார்.
பாத்திமா அன்னையின் திருஉருவம் மீண்டும் இஞ்ஞாயிறு மாலை பாத்திமாவுக்கு எடுத்துச்செல்லப்படும்.
போர்த்துக்கல் நாட்டு பாத்திமா திருத்தலத்தில் உள்ள இவ்வன்னைமரியா திருவுருவம் மிக முக்கிய நிகழ்வுகளுக்காக மட்டுமே அங்கிருந்து எடுக்கப்படுகிறது. இரண்டாயிரமாம் ஜூபிலி ஆண்டில் இத்திருவுருவம் வத்திக்கானுக்குக் கொண்டு வரப்பட்டது. நம்பிக்கை ஆண்டையொட்டி இடம்பெறும் மரியா நாள் கொண்டாட்டங்களுக்காக, தற்போது மீண்டும் இத்திருவுருவம் வத்திக்கானுக்குக் கொண்டுவரப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.