2013-10-12 16:01:59

இவ்வாண்டு முடிவதற்குள் உலகின் 40 விழுக்காட்டு மக்கள் இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள், ஐ.நா.


அக்.12,2013. இவ்வாண்டு முடிவதற்குள் உலகின் 40 விழுக்காட்டு மக்கள், அதாவது 270 கோடிப் பேர் இணையதளத்தைப் பயன்படுத்துகிறவர்களாக இருப்பார்கள் என்றும், உலகளாவிய தகவல் தொழில்நுட்பத்திலும், தொடர்புத் தொழில்நுட்பச்(ICT) சந்தையிலும் கைபேசி இணையதள வசதிகள் அதிவேகமாக வளரும் கூறுகளாக இருக்கும் என்றும் ஐ.நா. நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.
அனைத்துலக தொலைத்தொடர்பு கழகம்(ITU) வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில், இவ்வுலகில் 2013ம் ஆண்டு முடிவதற்குள் ஏறக்குறைய 680 கோடிப் பேர் கைபேசிகளை வைத்திருப்பர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
160க்கும் மேற்பட்ட நாடுகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் இணையதள வசதிகளைக் கொண்ட கைபேசிகளின் விலை 82 விழுக்காடு குறைந்துள்ளதாகக் கூறும் இவ்வறிக்கை, கைபேசி இணையதளங்கள் பிரபலமாகி வருவதாகவும் தெரிவிக்கின்றது.
இணையதளங்களைப் பயன்படுத்துவோர் மற்றும் அவற்றில் திறமையுடையோர் குறித்து 157 நாடுகளில் எடுத்த ஆய்வில் கொரியக் குடியரசு மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் இருப்பதாகவும், அதையடுத்து சூவீடன், ஐஸ்லாந்து, டென்மார்க், ஃபின்லாந்து, நார்வே ஆகிய நாடுகள் இருப்பதாகவும் தொலைத்தொடர்பு கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.