2013-10-11 16:31:40

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உரையாற்ற அழைப்பு


அக்.11,2013. பிரான்ஸ் நாட்டின் Strasburg நகரிலுள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வருகை தருமாறு அதிகாரப்பூர்வமாக அழைப்புவிடுத்துள்ளார் ஐரோப்பிய பாராளுமன்றத் தலைவர் Martin Schulz.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வெள்ளிக்கிழமையன்று வத்திக்கானில் சந்தித்துப் பேசிய Schulz அவர்கள், இச்சந்திப்பின் இறுதியில் இவ்வழைப்பை முன்வைத்தார்.
30 நிமிடங்கள் இடம்பெற்ற இச்சந்திப்பில், உலகின் ஏழ்மை மற்றும் குடியேற்றதாரர் விவகாரம் குறித்துப் பேசப்பட்டதாகத் தெரிவித்தார் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி.
மேலும், முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இதே அக்டோபர் 11ம் தேதி ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு வருகை தந்ததை நினைவுகூர்ந்த Schulz, 766 உறுப்பினர்களைக் கொண்ட இப்பாராளுமன்றம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தொலைநோக்கு, தோழமையுணர்வு மற்றும் நம்பிக்கை நிறைந்த செய்தியைக் கேட்பதில் மகிழ்ச்சியடையும் என்று கூறியதாக அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
மேலும், ஐரோப்பிய சமுதாய அவையின் பாராளுமன்றத் தலைவர் Jean-Claude Mignon அவர்களையும் இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.