2013-10-11 16:33:01

திருத்தந்தை பிரான்சிஸ் : யூதமத விரோதப்போக்கு ஒழிக்கப்பட வேண்டும்


அக்.11,2013. ஒவ்வொரு மனிதரின் இதயம் மற்றும் வாழ்விலிருந்து யூதமத விரோதப்போக்கு களையப்பட வேண்டும் என்று இவ்வெள்ளியன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இரண்டாம் உலகப் போரின்போது யூதர்கள் உரோமையைவிட்டு வெளியேற்றப்பட்டதன் 70ம் ஆண்டையொட்டி, உரோம் யூத சமுதாயப் பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்துப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ், இன்னும் சில நாள்களில், உரோம் நகர் யூதர்கள் வெளியேற்றப்பட்டதன் 70ம் ஆண்டை நினைவுகூரவுள்ளோம், மனிதக் கொடூரங்களுக்குப் பலியான பல அப்பாவி மக்களையும், அவர்களின் குடும்பங்களையும் நினைவுகூர்ந்து செபிப்போம் என்று கூறினார்.
எந்த ஒரு சூழ்நிலையிலும், உரோம் நகரிலும் உலகிலும் யூதமத விரோதப்போக்கு இடம்பெறக் கூடாது என்றுரைத்த திருத்தந்தை, எந்த வடிவிலும் சகிப்பற்றதன்மை இடம்பெறாமலிருக்க எப்போதும் விழிப்பாயிருக்க இந்நினைவுநாள் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கின்றது கூறினார்.
இரண்டாம் உலகப் போரின்போது கிறிஸ்தவ சமுதாயம் யூதர்களுக்குச் செய்த சிறிய, பெரிய உதவிகளை நினைவுகூர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் யூதமதத் தலைமை ராபி Rabbi Riccardo Di Segni அவர்களின் தலைமையில் இப்பிரதிநிதிகள் குழு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்தது.
1943ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியன்று உரோமையில் வாழ்ந்த ஆயிரத்துக்கு அதிகமான யூதர்கள் கைதுசெய்யப்பட்டு, நாத்சி Auschwitz வதைப்போர் முகாமுக்கு அனுப்பப்பட்டனர். பின்னர், மேலும் 800 உரோம் யூதர்களும் வெளியேற்றப்பட்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.