2013-10-11 16:31:48

கிறிஸ்தவர்கள் சாத்தானின் தந்திரங்களினின்று தங்களைக் காத்துக்கொள்ளுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு


அக்.11,2013. கிறிஸ்தவர்கள் தங்களை, சாத்தானின் தந்திரங்களினின்று காத்துக்கொள்வதில் எப்பொழுதும் கவனமாய் இருக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
இவ்வெள்ளிக்கிழமை காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், கிறிஸ்தவர்கள், தீயவன்மீதான இயேசுவின் வெற்றியை அரைமனதுடன் பின்பற்றக் கூடாது என்றும், தீயவனுக்கு எதிரான இயேசுவின் போர் குறித்து குழப்பமடையக் கூடாதும் என்றும் கூறினார்.
இயேசு பேய்களை ஓட்டியதை வைத்து எழுந்த வாக்குவாதங்கள் பற்றிய இந்நாளைய நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, இயேசு குணமாக்குபவர் மட்டுமே என்பது போன்ற சிந்தனை எழும்பி, அவரைக் குறைத்து மதிப்பிடுவதற்கான சோதனை எப்பொழுதும் எழுகின்றது, இத்தகைய எண்ணம் இக்காலத்திலும் காணப்படுகின்றது என்றும் கூறினார்.
சாத்தானின் இருப்பு விவிலியத்தின் முதல் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, கடவுள் சாத்தானை வெற்றி கொள்வதோடு விவிலியம் நிறைவடைகின்றது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், சாத்தானின் இருப்பைத் தேர்ந்துதெளியவும், சோதனைகள் ஏற்படும்போது கிறிஸ்தவ வழியில் செல்லவும் நம் ஆண்டவர் சில கூறுகளை நமக்குக் கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.
சாத்தானை அழித்து, அதன் பிடியினின்று நமக்கு விடுதலை அளிப்பதற்காக இயேசு இவ்வுலகுக்கு வந்தார், நாம் எப்பொழுதும் விழிப்புடன் இருந்து சாத்தானின் தந்திரங்களினின்று நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும் என்று மறையுரையில் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.