2013-10-11 17:00:24

OPCW குழுவுக்கு 2013ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது


அக்.11,2013. சிரியாவில் வேதிய ஆயுதங்களை அழிக்கும் பணியை மேற்பார்வையிடும் OPCW என்ற வேதிய ஆயுதங்கள் தடை நிறுவனத்துக்கு இவ்வாண்டின் நொபெல் அமைதி விருதை வழங்குவதாக, அவ்விருது வழங்கும் குழு இவ்வெள்ளிக்கிழமையன்று அறிவித்துள்ளது.
வேதிய ஆயுதங்களை அழிப்பதில் OPCW நிறுவனம் செய்துவரும் பெரியஅளவிலான பணியைப் பாராட்டும் விதமாக, இந்நிறுவனத்துக்கு 2013ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்படுவதாக நொபெல் குழு மேலும் தெரிவித்துள்ளது.
1993ம் ஆண்டின் வேதிய ஆயுதங்கள் ஒப்பந்தம் செயல்படுத்தப்படுவதைக் கண்காணிப்பதற்கென, 1997ம் ஆண்டில் OPCW நிறுவனம், நெதர்லாண்ட்ஸின் ஹேக்குவை(The Hague) மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
சிரியாவில் சேமித்து வைக்கப்பட்டுள்ள வேதிய ஆயுதங்கள் ஒழிக்கப்படுவதை மேற்பார்வையிடுவதற்கென இந்நிறுவனம் அண்மையில் தனது கண்காணிப்பாளர்களை அனுப்பியுள்ளது. வேதிய ஆயுதங்கள் ஒப்பந்தத்தில் 190வது நாடாக சிரியா கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1993ம் ஆண்டின் வேதிய ஆயுதங்கள் தடை ஒப்பந்தத்துக்குப் பின்னர் உலகில் சேமிப்பிலிருந்த வேதிய ஆயுதங்களில் ஏறக்குறைய 80 விழுக்காடு அழிக்கப்பட்டுவிட்டது.
நொபெல் அமைதி விருது, ஒரு தங்கப் பதக்கத்தையும், ஒரு கோடியே 25 இலட்சம் டாலர் காசோலையையும் கொண்டது.
OPCW நிறுவன இயக்குனர் Ahmet Üzümcü அவர்கள், கடந்த செப்டம்பர் 27ம் தேதியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : BBC







All the contents on this site are copyrighted ©.