2013-10-10 16:14:12

பெரு நாட்டில் பெருகிவரும் கொலைக் குற்றங்களைத் தடுக்க, சிறைக் கைதிகள் முயற்சி


அக்.10,2013. பெரு நாட்டின் Chimbote பகுதியில் பெருகிவரும் கொலைக் குற்றங்களைத் தடுக்க, சிறையில் இருக்கும் கைதிகள் முயற்சிகள் மேற்கொள்வது வரவேற்கத் தக்க ஒரு பணி என்று பெரு நாட்டின் ஆயர் ஒருவர் கூறினார்.
பெரு நாட்டின் தலைநகரான Limaவுக்கு வடக்கே அமைந்துள்ள Chimbote என்ற நகரில் நடப்பு ஆண்டின் ஆகஸ்ட் மாதம் முடிய 60க்கும் அதிகமான கொலைகள் நடைபெற்றுள்ளன.
கவலை தரும் இந்தப் போக்கை நிறுத்த, அந்நகரில் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் அக்டோபர் 17, வருகிற வியாழனன்று தங்கள் சிறை வளாகத்தில் ஒரு அமைதி ஊர்வலத்தையும், திருப்பலியையும் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இத்திருப்பலியை ஆற்ற Chimbote ஆயர் Simon Piorno அவர்களைச் சிறை கைதிகள் அழைத்ததையடுத்து, ஆயர் அவர்கள் இத்திட்டத்தைப் பாராட்டி, Fides செய்திக்கு அளித்த பேட்டியில் தன் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
எப்பாவமும் அறியாதவர்கள் கொல்லப்படுவதை நிறுத்தி, Chimbote நகரை அமைதியுள்ள நகராக மாற்றுவது அனைவரின் கடமை என்பதை சிறைக் கைதிகள் வலியுறுத்தி இந்த முயற்சியை மேற்கொள்கின்றனர் என்று ஆயர் Piorno அவர்கள் கூறினார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.