2013-10-10 15:39:44

கற்றனைத்தூறும் ... ஆக்ஸ்போஃர்ட் அகராதியில் 'Tweet' எனும் சொல்


இணையப்பயன்பாடு மூலம் உலகில் அதிகளவிலான மக்களால் உச்சரிக்கப்படும் சொல்லான டுவிட்டரின்(Twitter) 'Tweet' (டுவீட்) என்ற கணனி மொழி பிரபலமடைந்ததால் அச்சொல் அண்மையில் ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியின்(OED) புதிய பதிப்பில், புதிய அதிகாரப்பூர்வ ஆங்கிலச் சொல்லாக இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது. இதில் 'Tweet' என்பதற்கு அர்த்தம் என, டுவிட்டரில் ஒரு குறுஞ்செய்தியைப் பதிவு செய்ய('to post a message to Twitter') எனப் பதியப்பட்டுள்ளது. இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் ஆக்ஸ்போஃர்ட் ஆங்கில அகராதிகளின் முன்னையப் பதிப்பில் ஏற்கனவே 'Tweet' என்ற சொல் காணப்படுகின்றபோதிலும் அதற்கான அர்த்தம் ஒரு பறவையின் பாடல் என்றவாறே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வருகிற ஜூன் மாதத்தில் வெளியாகவுள்ள இந்த அகராதியின் 2013ம் ஆண்டுக்கான பதிப்பில் இந்தப் புதிய அர்த்தமும் அதனுடன் சேர்க்கப்பட்டுள்ளது. இணையத்தில் உள்ள பிரபலமான தகவல்தொடர்புத் தளமான டுவிட்டரில் ஒவ்வொரு நாளும் 34 கோடி டுவீட்டுக்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதில் கணக்கு வைத்திருப்பவர்களில் வத்திக்கான் நாட்டின் தலைவர் திருத்தந்தை, திபெத் புத்தமதத் தலைவர் தலாய்லாமா போன்றோரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் உலகம் முழுதும் இணையத்தைப் பயன்படுத்தும் கோடிக்கணக்கான பயன்பாட்டாளர்களின் அன்றாட பயன்பாட்டுச் சொல்லாக Tweet மாறிவிட்டதால் அது ஆங்கில மொழியில் ஒரு பரிணாமச் சொல்லாக வளர்ந்துவிட்டது என்றே இந்த அகராதியை வடிவமைத்தவர்கள் கூறுகின்றனர். OEDன் தலைமை பதிப்பாசிரியர் John Simpson இந்தப் புதிய பதிப்புக் குறித்துப் பேசியபோது, பொதுவாக, OEDல் ஒரு புதிய சொல் சேர்க்கப்படுவதற்கு முன்னர் பத்து ஆண்டுகள் அச்சொல் பயன்பாட்டில் இருக்க வேண்டும், ஆனால் 'Tweet' எனும் சொல் 2007ம் ஆண்டில் மார்ச் 15ம் தேதியன்று NevOn blogல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது, ஆகவே OEDல் Tweetக்குப் புதிய அர்த்தத்தைச் சேர்க்கும் இம்முயற்சியில் குறைந்தது ஒரு விதி மீறப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : 4TamilMedia/ABC News







All the contents on this site are copyrighted ©.