2013-10-09 16:03:35

வத்திக்கானுக்கு வரும் பாத்திமா அன்னையின் திருஉருவத்தை திருத்தந்தை வரவேற்கிறார்


அக்.09,2013. வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பிக்கப்படும் அன்னை மரியா நாள் கொண்டாட்டங்களையொட்டி, பாத்திமா திருத்தலத்திலிருந்து வத்திக்கானுக்குக் கொண்டுவரப்படும் பாத்திமா அன்னையின் திருஉருவச் சிலையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் வரவேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமையன்று பேராலய வளாகத்தில் திருத்தந்தை அவர்கள் முன்னின்று நடத்தும் மாலை செப வழிபாட்டின்போதும், ஞாயிறன்று அவர் நடத்தும் திருப்பலியின்போதும் பாத்திமா அன்னையின் திரு உருவம் சிறப்பு இடம் பெறும்.
1981ம் ஆண்டு மேமாதம் 13ம் தேதியன்று, முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களைக் கொல்லும் முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, அவர் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டு, பாத்திமா அன்னை திரு உருவத்தின் மகுடத்தில் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமைப் பணியின் முதலாம் ஆண்டு நினைவாக, அக்டோபர் 8, இச்செவ்வாயன்று ஒரு சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டது.
இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முகமும், மறு பக்கத்தில், அவரது இறையழைத்தலை நினைவுறுத்தும் வண்ணம், இயேசுவால் புனித மத்தேயு அழைக்கப்பட்ட காட்சியும் பொறிக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : VIS / CNA/EWTN








All the contents on this site are copyrighted ©.