2013-10-09 16:10:38

அன்னைமரியா திருத்தலங்கள் – செபமாலை அன்னைமரியா


அக்.09,2013. செபமாலை, கத்தோலிக்கரின் வாழ்வில் மிக முக்கிய பக்தி முயற்சிகளில் ஒன்றாக இருந்துவருகிறது. இச்செபமாலையின் அடிப்படையில் அன்னைமரியாவுக்கு வழங்கப்படுகின்ற பெயரே செபமாலை அன்னைமரியா என்பதாகும். 11ம் மற்றும் 13ம் நூற்றாண்டுகளில் தெற்கு பிரான்சில் Catharist என்ற சமயப் பிரிவினர் கத்தோலிக்க விசுவாசத்தில் தளர்ச்சியை உருவாக்கும் விதத்தில் தவறான கருத்துகளை மக்களிடையே பரப்பி வந்தனர். இவர்கள் Albi என்ற ஊரில் அதிகமாக இருந்துகொண்டு இக்கொள்கையைப் பரப்பியதால் இவர்கள் ஆல்பிஜென்சியர்கள்(Albigensians) என அழைக்கப்பட்டனர். இவர்களை மனமாற்றுவதற்காக, புனித தோமினிக் என்ற புனித சாமிநாதர் பிரான்சின் Prouilleல் 1208ம் ஆண்டில் தங்கியிருந்தார். அவ்வாண்டில் ஒருநாள் அன்னைமரியா இப்புனிதருக்கு தோன்றி செபமாலையைக் கொடுத்து, "இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை தியானித்தவாறே, மங்கள வார்த்தை செபங்களைச் செபிக்கும் செபமாலை பக்திமுயற்சியை மக்களிடையே பரப்பினால் ஆல்பிஜென்சிய தப்பறைகள் மறைந்துவிடும்" என்று கூறி மறைந்தார். இக்காட்சிக்குப் பின்னர் புனித தோமினிக் செபமாலைச் செபித்து இவர்களை எளிதாக மனமாற்றினார். இவர் செபமாலை பக்தியை கிறிஸ்தவர்களிடையே பரப்பியதால், மக்களிடையே பரவியிருந்த விசுவாசத்திற்கு எதிரான தவறான கருத்துகள் அனைத்தும் மறைந்தன என்று பாரம்பரியமாகச் சொல்லப்படுகிறது.
இச்செபமாலை பக்திக்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. விவிலியத்திலுள்ள 150 திருப்பாடல்களைப் பின்பற்றி 150 முறை இதனைச் செபித்தனர். அதேநேரம் 150 அருள்நிறை மரியே செபமும் சேர்த்துச் சொல்லப்பட்டது. பின்னர் இயேசுவின் வாழ்வோடு தொடர்புடைய மறையுண்மைகள் ஒவ்வோர் அருள்நிறை மரியே செபத்தோடு சேர்க்கப்பட்டன. புனித தொமினிக்கைப் பின்பற்றியவர்களில் ஒருவரான Alan de la Roche என்பவர் இச்செபமாலை பக்தியை வளர்த்தார். இவர் "செபமாலையின் திருத்தூதர்" என அழைக்கப்படுகிறார். இவர் 15ம் நூற்றாண்டில் செபமாலையின் சகோதரத்துவ அமைப்பை ஏற்படுத்தினார். மகிழ்ச்சி, துக்கம், மகிமை ஆகியவற்றைக்கொண்ட 15 மறையுண்மைகளைக் கொண்ட செபமாலை 16ம் நூற்றாண்டில் வளர்ந்தது. முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் ஒளியின் மறையுண்மைகளை 2002ம் ஆண்டில் இதில் இணைத்தார். செபமாலை அன்னையின் விழா அக்டோபர் 7ம் தேதி சிறப்பிக்கப்படுகின்றது.
“செபமாலை சொல்லும் இராணுவத்தை என்னிடம் கொடுங்கள், நான் உலகை வென்று காட்டுகிறேன்” என்று சொன்னார் திருத்தந்தை 9ம் பத்திநாதர். அக்காலத்தில் கிறிஸ்தவர்கள் தங்கள் எதிரிகளை முறியடிப்பதற்குச் செபமாலையை ஓர் ஆயுதமாகக் கொண்டிருந்து போர்களில் வெற்றியும் அடைந்துள்ளனர். பிரான்ஸ் நாட்டு துலுசுக்கு(Toulouse) அருகிலுள்ள மியுரெட்டில்(Muret) 1213ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதியன்று நடந்த சண்டையில், 4ம் Simon de Montfort என்பவரின் சிலுவைப்போர் இராணுவம், Aragonனின் 2ம் பீட்டரின் படைகளை முறியடித்தது. இதற்கு நன்றியாக Montfort, வெற்றியின் அன்னைமரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் திருத்தலத்தைக் கட்டினார். 1453ம் ஆண்டில் துருக்கியின் ஒட்டமான் முஸ்லீம் பேரரசின் படைகள் பைசான்ட்டைன் பேரரசை ஆக்ரமித்து கிறிஸ்தவ உலகின் பெரும்பகுதியை இஸ்லாமியச் சட்டத்தின்கீழ் கொண்டுவந்தது. அடுத்த நூறு ஆண்டுகளில் துருக்கிப் படைகள் மேற்குநோக்கி விரிவடைந்து அவற்றின் கடற்படையை மத்தியதரைக் கடலில் அமைத்தன. உரோமை ஆக்ரமிக்கும் எண்ணத்தில் 1565ம் ஆண்டில் அப்படைகள் மால்ட்டாவைத் தாக்கின. எனினும் அப்படைகள் மால்ட்டாவைவிட்டு விரட்டியடிக்கப்பட்டாலும், 1570ம் ஆண்டில் அவை சைப்ரசைக் கைப்பற்றின.
அதற்கு அடுத்த ஆண்டில் ஜெனோவா, இஸ்பெயின், பாப்பிறைப் பகுதிகள் ஆகிய மூன்று கத்தோலிக்க வல்லரசுகள் புனித உடன்படிக்கை செய்து துருக்கியின் ஆக்ரமிப்புக்கு எதிராக கிறிஸ்தவக் கலாச்சாரத்தை நிலைநாட்ட உறுதி எடுத்தன. இப்படைகளின் 200க்கு மேற்பட்ட கப்பல்களில் இருந்த படைவீரர்கள் இப்போருக்குத் தயாரிப்பாக, செபமாலை செபித்தனர். அதேசமயம் திருத்தந்தை 5ம் பத்திநாதர் அவர்களின் தூண்டுதலால், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகம் உட்பட ஐரோப்பா எங்கும் கிறிஸ்தவர்கள் இதே கருத்துக்காகச் செபமாலை செபித்தனர். போரில் கத்தோலிக்கர் வெற்றிபெறுவதாக இத்திருத்தந்தைக்குக் காட்சி ஒன்றில் தெரிவிக்கப்பட்டது. இறுதியில் துருக்கியர் தங்களின் Lepanto கடற்படைத் தளத்திலிருந்து முன்னேற, கத்தோலிக்கப் படைகள் மெசினாவிலிருந்து முன்னேறி, கிரீசின் மேற்கு கடற்கரைக்கு அருகில் கொரிந்து வளைகுடாவில் 1571ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதியன்று இடம்பெற்ற 5 மணிநேரச் சண்டையில் துருக்கியர் தோற்கடிக்கப்பட்டனர். இதன்மூலம் துருக்கியின் ஒட்டமான் முஸ்லீம் பேரரசு, மத்தியதரைக்கடலின் ஐரோப்பியப் பகுதிக்கு மேலும் முன்னேறாமல் தடைசெய்யப்பட்டது. Lepanto போர் எனப்படும் இது மத்தியதரைக்கடலில் இடம்பெற்ற மிகப்பெரிய கடற்படைச் சண்டையாகச் சொல்லப்படுகிறது.
செபமாலையைச் செபித்ததால் இப்போரில் கிறிஸ்தவர்கள் வெற்றியடைந்து, மேற்கத்திய ஐரோப்பாவை முஸ்லீம்களிடமிருந்து காப்பாற்றவும் முடிந்தது. Lepanto போரில் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்களைத் தோற்கடித்ததை நினைவுகூரும் விதமாக, வெற்றியின் அன்னைமரியா விழாவை, ஆண்டுதோறும் சிறப்பிக்குமாறு 1571ம் ஆண்டில் திருத்தந்தை 5ம் பத்திநாதர் அறிவித்தார். 1573ம் ஆண்டில் திருத்தந்தை 13ம் கிரகரி, வெற்றியின் அன்னைமரியா விழா என்ற பெயரை, புனித செபமாலை அன்னைமரி விழா என்று மாற்றினார். பின்னர் திருத்தந்தை 11ம் கிளமென்ட், 1716ம் ஆண்டில் உரோமன் கத்தோலிக்கப் புனிதர்கள் நாள்காட்டியில் புனித செபமாலை அன்னைமரியா விழாவை இணைத்து, உலகின் இலத்தீன் வழிபாட்டுமுறையினர் அனைவரும் அவ்விழாவை அக்டோபர் மாதத்தின் முதல் ஞாயிறன்று கொண்டாடுமாறு பணித்தார். பின்னர் 1913ம் ஆண்டில் திருத்தந்தை 10ம் பத்திநாதர், ஞாயிறு திருவழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில், இவ்விழாவை அக்டோபர் 7ம் தேதிக்கு மாற்றினார். இன்று உலகின் பல பகுதிகளில் புனித செபமாலை அன்னைமரியா பாதுகாவலராக இருக்கிறார். இவ்வன்னையின் பெயரில் பல துறவு சபைகளும் உள்ளன.
10ம் நூற்றாண்டில் அன்னைமரியா காட்சி கொடுத்த பின்னர் கான்ஸ்டான்டிநோபிள், எதிரிகளின் ஆக்ரமிப்பிலிருந்து காப்பாற்றப்பட்டது. இதன் நினைவாக, ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவரும், கீழை வழிபாட்டுமுறை கிறிஸ்தவரும் இவ்விழாவை அக்டோபர் முதல் தேதியன்று சிறப்பிக்கின்றனர். செபமாலை அன்னைமரியாமீது மிகுந்த பக்தி கொண்டிருந்த திருத்தந்தை 13ம் சிங்கராயர்(13ம் லியோ), இவ்விழா தொடர்பான 11 திருமடல்களை எழுதியிருக்கிறார். இவற்றில் 1883ம் ஆண்டில் எழுதிய “Supremi Apostolatus Officio” என்ற முதல் திருமடலில், கத்தோலிக்கர் தங்களின் ஆபத்துக்களிலும் துன்பங்களிலும் எப்பொழுதும் மரியிடம் செல்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார். 1917ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி பாத்திமாவில் அன்னைமரியா, மூன்று சிறாரிடம், "நானே செபமாலை அன்னைமரியா" என்று சொல்லி, செபமாலை செபிக்கவும் தூண்டினார். செபமாலையைத் தினமும் செபிப்பவர்கள் ஒருநாளும் நெறி தவறிப் போக மாட்டார்கள் என்று புனித Louis de Montfort சொன்னார். நாமும் தினமும், குறிப்பாக நமது துன்ப சோதனை நேரங்களில் செபமாலை செபித்து அன்னைமரியின் பாதுகாவலை உணருவோம்.
இரண்டாம் உலகப்போர் முடிவில் 1945 ஆகஸ்ட் 6ந்தேதி, சின்னப் பையன் (Little Boy) என்ற அணுகுண்டை ஜப்பான் நாட்டின் ஹிரோசிமா நகரில் அமெரிக்கா வீசியது. அதன் விளைவாக ஏறக்குறைய ஐந்து இலட்சம் மக்கள் உயிரிழந்தனர். ஆனால் அப்போது அந்நகரின் மையத்தில், குண்டு வீசப்பட்ட இடத்திற்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்த விண்ணேற்பு அன்னை ஆலயமும், அதனோடு இணைந்திருந்த இயேசு சபை இல்லமும் மட்டும் கதிர்வீச்சுத் தாக்குதலில் இருந்து தப்பின. அந்த இல்லத்தில் இருந்த இயேசு சபை குருக்கள் அனைவரும் எந்தக் காயமும் இன்றி உயிர் பிழைத்தனர். உயிர் தப்பிய குருக்கள், "பாத்திமா அன்னையின் செய்தியின்படி வாழ்ந்ததால்தான் நாங்கள் உயிர் பிழைத்தோம் என்று நம்புகிறோம்; தினமும் செபமாலை செபிக்கும் வழக்கமே எங்களைக் காப்பாற்றி இருக்கிறது" என்று செபமாலை அன்னைக்கு சான்று பகர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.