2013-10-08 14:58:56

விவிலியத் தேடல் செல்வரும் இலாசரும் உவமை – பகுதி 1


RealAudioMP3 சரியாக 60 ஆண்டுகளுக்கு முன், 1953ம் ஆண்டு, அமெரிக்காவின் Chicago இரயில் நிலையத்தில் கூட்டம் ஒன்று காத்திருந்தது. இரயிலில் வரவிருக்கும் ஒரு முக்கியமானவரை வரவேற்க, அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், நகரப் பிரமுகர்கள் என்று பலரும் அந்த இரயில் நிலையத்தை நிறைத்திருந்தனர். இரயில் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய அந்த முக்கியமான மனிதரைக் கண்டதும், கரவொலி எழுந்தது, காமிரா விளக்குகள் பளிச்சிட்டன. ஆனால், இரயிலில் வந்து இறங்கியவர் அவர்களிடம், "தயவுசெய்து சிறிது நேரம் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு, கூட்டத்தை விலக்கிக்கொண்டு நடந்தார். அங்கு, இரயில் நிலைய நடைமேடையில் இரு பெட்டிகளைச் சுமந்தபடி தட்டுத்தடுமாறி நடந்துகொண்டிருந்த வயதுமுதிர்ந்த ஒரு கறுப்பின பெண்ணுக்கு உதவிசெய்து, அவரை ஒரு பேருந்தில் ஏற்றிவிட்டார்.
பின்னர், தனக்காகக் காத்திருந்தவர்களிடம் திரும்பிவந்தார் அந்த முக்கிய மனிதர். அவரது செயல்பாடுகளைக் கவனித்துக்கொண்டிருந்த ஒரு பத்திரிகை நிருபர், மற்றொருவரிடம், "நான் இதுவரை கோவில்களில் மறையுரைகளைக் கேட்டிருக்கிறேன். அனால், இப்போதுதான் முதன்முறையாக ஒரு நடமாடும் மறையுரையைப் பார்த்தேன்" என்று கூறினார். நடமாடும் மறையுரை என்ற இப்புகழைப் பெற்றவர் மருத்துவரும் இறையியல் முனைவருமான Albert Schweitzer.

வாய் வார்த்தைகளால் பறைசாற்றப்படும் நற்செய்தியைக் காட்டிலும், வாழ்ந்து காட்டப்படும் நற்செய்தி இன்னும் ஆழமான தாக்கங்களை உருவாக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். வாழ்க்கையால் நற்செய்தியைப் பறைசாற்றிய பலரில், Dr.Albert Schweitzerம் ஒருவர். இவர் ஆப்ரிக்காவில் மேற்கொண்ட அற்புதமான மருத்துவப் பணிகளுக்காகவும், அணு ஆய்வுகள் இவ்வுலகிற்குத் தேவையில்லை என்ற எண்ணத்தை உலகில் வளர்க்க இவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் 1952ம் ஆண்டு உலக அமைதிக்கான நொபெல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. இப்பரிசைப் பெற்ற அடுத்த ஆண்டு இவர் அமெரிக்காவின் சிக்காகோ நகருக்கு சென்றிருந்தபோது, இரயில் நிலையத்தில் நிகழ்ந்ததைத்தான் நாம் மேலே நினைவுகூர்ந்தோம்.

ஜெர்மனி நாட்டில் 1875ம் ஆண்டு பிறந்த Albert Schweitzer அவர்கள், 25 வயதில் இறையியலில் முனைவர் பட்டம் பெற்று, ஜெர்மனியில் மிகப் புகழ்பெற்ற Tübingen பல்கலைக்கழகத்தில் பேராசிரியாராகப் பணியாற்றினார். மறையுரை வழங்குவதிலும், இறையியல் வகுப்புக்கள் நடத்துவதிலும் இணையற்ற புகழ் பெற்றிருந்தார். திறமை மிக்க இசைக் கலைஞராகவும் விளங்கினார்.
ஆனால், 1905ம் ஆண்டு, அவரது 30வது வயதில், ஆல்பர்ட் அவர்கள் வாழ்வில் ஒரு பெரும் திருப்பம் ஏற்பட்டது. அவர் அடைந்திருந்த அனைத்துப் புகழையும் ஒதுக்கிவைத்துவிட்டு, மருத்துவப் படிப்பை மேற்கொண்டார். ஆப்ரிக்காவில் வசதிகள் ஏதுமின்றி வாழும் மக்களிடையே மருத்துவப் பணியாற்றும் நோக்கத்துடன் அவர் மருத்துவப் படிப்பைத் துவங்கினார். எட்டு ஆண்டுகள் சென்று, 1913ம் ஆண்டு, Albert Schweitzer அவர்கள், தன் மனைவியோடும், மகனோடும் ஆப்ரிக்கா சென்றார். அங்கு, Gabon என்ற நாட்டில், Lambaréné என்ற ஊரில், வசதிகள் மிகவும் குறைந்த மக்கள் வாழும் ஒரு பகுதியில் மருத்துவமனை ஒன்றை கட்டி, தன் பணியைத் துவக்கினார். மருத்துவமனை துவக்கப்பட்ட முதல் 9 மாதங்களில் 2000க்கும் அதிகமான வறியோர் இவரிடம் மருத்துவ உதவிகள் பெற்றனர்.
ஆல்பர்ட் அவர்கள் எடுத்த இந்த முடிவைக் குறித்து கேள்விகள் எழுந்தபோது, இயேசு கூறிய 'செல்வரும் இலாசரும்' என்ற உவமையே தனக்குள் இந்த மாற்றத்தை உருவாக்கியது என்று ஆல்பர்ட் கூறினார். இவ்வுவமையில் கூறப்பட்டுள்ள செல்வர் ஐரோப்பிய மக்கள் என்றும், இலாசர் ஆப்ரிக்க மக்கள் என்றும் தான் உணர்ந்ததால், இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறினார். பல்வேறு இடர்களைச் சந்தித்தாலும், வறுமையில் வாடிய ஆப்ரிக்க மக்களுக்கு மருத்துவப் பணிகளைப் பல ஆண்டுகள் ஆல்பர்ட் செய்துவந்தார்.

Albert Schweitzer அவர்களின் வாழ்வில் மட்டுமல்ல, இன்னும் பல்லாயிரம் உள்ளங்களில் அடிப்படையான, புரட்சிகரமான மாற்றங்களை உருவாக்கக் காரணமாக இருந்த 'செல்வரும் இலாசரும்' என்ற உவமையில் இன்று நம் தேடலைத் துவக்குகிறோம்.

கிறிஸ்தவ மறை என்ற எல்லையைத் தாண்டி, பல கோடி உலக மக்களுக்கு அறிமுகமான புகழ்பெற்ற உவமைகள் லூக்கா நற்செய்தியில் உள்ளன என்று நாம் ஏற்கனவே குறிப்பிட்டோம். 'நல்ல சமாரியர் உவமை', 'காணாமற்போன மகன் அல்லது ஊதாரிப் பிள்ளை உவமை' என்று உலகெங்கும் அறியப்படும் உவமைகளின் வரிசையில் இடம்பெறும் மற்றொரு உவமை... 'செல்வரும் இலாசரும்' என்ற இவ்வுவமை.

லூக்கா நற்செய்தி 16ம் பிரிவின் பிற்பகுதியில் காணப்படும் இந்த உவமையை இயேசு கூறுவதற்கு தனிப்பட்ட காரணம் எதுவும் கொடுக்கப்படவில்லை. ஆயினும், லூக்கா நற்செய்தி 16ம் பிரிவை சிறிது முன்னோக்கிப் பார்த்தால், இந்த உவமையை இயேசு சொன்னதற்கானக் காரணத்தை ஓரளவு கணிக்கலாம்.
இன்னும் ஒரு சில விவிலிய ஆய்வாளர்கள், இந்த உவமையை லூக்கா நற்செய்தி 15ம் பிரிவின் தொடர்ச்சியாகவும் காண்கின்றனர். இயேசுவின் புகழ்பெற்ற உவமைகளான காணாமற்போன ஆடு, நாணயம், மகன் என்ற மூன்று உவமைகளை இயேசு கூறுவதற்கு காரணமாக 15ம் பிரிவின் ஆரம்ப வரிகளில் நாம் காண்பது இதுதான்:
லூக்கா நற்செய்தி 15 1-3
வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர். பரிசேயரும், மறைநூல் அறிஞரும், "இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே" என்று முணுமுணுத்தனர். அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்:
என்று இந்தப் பிரிவு ஆரம்பமாகிறது. எனவே, இந்த மூன்று உவமைகளைத் தொடர்ந்து வரும் 16ம் பிரிவிலும் இயேசு கூறிய உவமைகள் தன்னைச் சுற்றியிருந்த மக்களை மனதில் வைத்து கூறப்பட்டிருக்கலாம், அல்லது அவரிடம் குறை காண்பதற்கும், அவரை ஏளனம் செய்வதற்கும் காத்திருந்த பரிசேயர்களையும், மறைநூல் அறிஞர்களையும் மனதில் கொண்டு வீட்டுப் பொறுப்பாளர் உவமையையும், செல்வரும் இலாசரும் உவமையையும் இயேசு கூறியிருக்கலாம்.
'முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப் பொறுப்பாளர்' உவமையுடன் லூக்கா நற்செய்தி,16ம் பிரிவு ஆரம்பமாகிறது. இந்த உவமையின் இறுதியில் இயேசு "நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது" என்ற அதிர்ச்சி தரும் எச்சரிக்கையை அழுத்தமாக விடுத்தார்.
இந்த எச்சரிக்கையைக் கேட்ட பரிசேயர்கள் இயேசுவை ஏளனம் செய்தனர். அந்த ஏளனத்திற்குப் பதில் மொழியாக, பரிசேயர்களின் வெளிவேடம் 'கடவுள் பார்வையில் அருவருப்பாக' உள்ளது என்ற கடினமான உண்மையை இயேசு அவர்களுக்குக் கூறுகிறார். இந்த உவமையில் செல்வம், கடவுள் பார்வை என்ற இரு கருத்துக்களும் இணைத்துச் சொல்லப்பட்டுள்ளன. மக்களின் மதிப்பு, எருசலேம் கோவில் வழங்கும் செல்வம் ஆகியவற்றால் நிறைவடைந்திருந்த பரிசேயர்கள், கடவுளின் பார்வையில் எவ்விதம் இருப்பர் என்பதைத் தெளிவுபடுத்த, செல்வர் மறுவாழ்வில் பெறும் அவலங்களை இவ்வுவமை வழியாக, இயேசு குறிப்பிட்டாரோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
நாம் சிந்திக்கவிருக்கும் இவ்வுவமை பரிசேயர்களுக்குச் சொல்லப்பட்டிருந்தாலும் சரி, அல்லது, இயேசுவைச் சுற்றி எப்போதும் கூடியிருந்த சீடர்களுக்கும், மக்களுக்கும் சொல்லப்பட்டிருந்தாலும் சரி, இதில் காணப்படும் உண்மைகள் அனைவருக்கும் பாடமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Klyne Snodgrass என்ற விவிலிய ஆய்வாளர் உவமைகளைப் பற்றி 2008ம் ஆண்டு வெளியிட்டுள்ள ஓர் ஆய்வு நூலில் (Stories with Intent: a Comprehensive Guide to the Parables of Jesus), 'செல்வரும் இலாசரும்' என்ற இந்த உவமையில் காணப்படும் தனித்துவம் மிக்க இரு சிறப்பு அம்சங்களை குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஓர் உவமையில் மட்டுமே கதாப்பாத்திரங்களுக்கு பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன அதாவது, இலாசர் என்ற பெயரும் ஆபிரகாம் என்ற பெயரும் கூறப்பட்டுள்ளன. இது முதல் சிறப்பு.
இந்த உவமையில் மட்டுமே, இவ்வுலக வாழ்க்கைக்குப் பின், மறு உலகில் நிகழ்வனவற்றை இயேசு குறிப்பிடுகிறார். இது இரண்டாவது சிறப்பு.

லூக்கா நற்செய்தி, 16ம் பிரிவில், 19 முதல் 31 முடிய உள்ள 13 இறைச் சொற்றொடர்களில் காணப்படும் இவ்வுவமையில், செல்வர் ஒருவர், ஏழை இலாசர் என்ற இருவரை மையப்படுத்தி இரு காட்சிகளை இயேசு நம்முன் வைக்கிறார். செல்வரும், இலாசரும் இவ்வுலகில் வாழ்ந்த வாழ்க்கை முதல் காட்சியாக மூன்று இறைச் சொற்றொடர்களிலும், இவ்விருவரும் இறந்தபின், மறு உலகில் நிகழ்வன இரண்டாவது காட்சியாக பத்து இறைச் சொற்றொடர்களிலும் கூறப்பட்டுள்ளன.

இவ்வுவமையின் பல்வேறு சிறப்புக்களைப் புரிந்துகொள்ள, இவ்வுவமையின் துவக்க வரிகளில் நம் தேடலைத் துவங்குகிறோம். உவமையின் முதல் பகுதியில், செல்வரும் இலாசரும் வாழ்ந்த இவ்வுலக வாழ்வைக் கூறும் 3 இறைச்சொற்றோடர்கள் இதோ:
லூக்கா நற்செய்தி 16:19-21
இயேசு அவர்களிடம் கூறியது:செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.

இந்த அறிமுக வரிகளில் செல்வரைப் பற்றி மூன்று குறிப்புக்களும், இலாசரைப் பற்றி ஐந்து குறிப்புக்களும் காணப்படுகின்றன.

இந்த எட்டுக் குறிப்புக்களின் ஆழமான அலசலை அடுத்த வாரம் தொடர்வோம்.








All the contents on this site are copyrighted ©.