2013-10-08 15:37:00

மியான்மாரில் இனவாத மோதல்கள் நிறுத்தப்பட்டு அமைதி காக்கப்படுமாறு யாங்கூன் பேராயர் வேண்டுகோள்


அக்.08,2013. புத்தமதத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட மியான்மாரில் சிறுபான்மை முஸ்லீம்களுக்கு எதிராக புத்தமதத்தினர் தாக்குதலை நடத்திவரும்வேளை, அந்நாட்டில் இனவாத மோதல்கள் நிறுத்தப்பட்டு அமைதி காக்கப்படுமாறு வேண்டுகோள்விடுத்துள்ளார் யாங்கூன் பேராயர் Charles Maung Bo.
கருணையைப் போதித்த புத்தரின் செய்தி உலகஅளவில் நன்மதிப்பைப் பெற்றுள்ளது என்றும், இந்துவான மகாத்மா காந்தி, அஹிம்சையின் திருத்தூதராகத் திகழ்ந்தார் என்றும் யாங்கூனில் இடம்பெற்ற பல்சமயக் கூட்டத்தில் கூறினார் பேராயர் Bo.
புதிய மியான்மாரில் வெறுப்புணர்வு பேச்சுகளுக்கு இடமேயில்லை என்றும், அந்நாட்டின் மக்களுக்கு இடையே இருக்கும் உறவில் அமைதியும் நல்லிணக்கமும் சந்திப்பதாய் இருக்கவேண்டுமென்றும் கூறினார் பேராயர் Bo.
5 கோடியே 46 இலட்சம் மக்களைக்கொண்ட மியான்மாரில் 89 விழுக்காட்டினர் புத்தமதத்தினர். 4 விழுக்காட்டினர் முஸ்லீம்கள். 3 விழுக்காட்டினர் பிரிந்த கிறிஸ்தவ சபையினர் மற்றும் கத்தோலிக்கரும் இயற்கையை வழிபடுவோரும் முறையே ஒரு விழுக்காட்டினர்.
மியான்மாரில் புத்த தேசியவாதக் குழுக்களும், புத்தமதத் தீவிரவாதத் துறவிகளும் முஸ்லீம்களுக்கு எதிரான உணர்வுகளை நாடெங்கும் விதைத்துவருவது வன்முறையைத் தூண்டியுள்ளது எனக் கூறப்படுகிறது.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.